சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைக் கைவிடுவதற்கு முடிவு செய்துள்ளார். இது தொடர்பான ஆவணங்களை தாம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் கையளித்துள்ளதாக கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் விசாரணை அறிக்கையில், கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட 40 சிறிலங்கா அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளதாக தகவல்கள்“ வெளியாகியுள்ள நிலையிலேயே, இவர் அமெரிக்க குடியுரிமையைக் கைவிட முடிவு செய்துள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் சட்டங்களின் படி, அமெரிக்க குடிமகன் ஒருவர், உலகில் எந்தப் பாகத்தில், போர்க்குற்றங்களை இழைத்திருந்தாலும், அவரை அமெரிக்க சட்டங்களின் கீழ் விசாரித்து தண்டிக்க முடியும்.
கோத்தாபய ராஜபக்ச மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால், அவர் மீது அமெரிக்கா நேரடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை இருந்ததாலேயே அவர் அமெரிக்க குடியுரிமையை கைவிட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் போருக்குத் தலைமை தாங்கிய இராணுவத் தளபதிகள் பலருக்கு அமெரிக்கா நுழைவிசைவு வழங்க மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.