தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக கட்சியைக் காட்டிக்கொடுக்க வேண்டாமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
சந்திரிகா குமாரதுங்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த வேணடுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரனதுங்க இரு நாட்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், ஜனவரி 8ம் தேதி நாட்டில் ஏற்பட்ட மாற்றத்தை பாதுகாக்குமாறு மக்களை கேட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஏற்கனவே ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் தலைமை பதவிகளில் இருந்தவர். தற்போது இவற்றின் கௌரவ பதவியான போஷகர் பதவிகளில் தொடர்ந்தும் இருக்கின்றார்.
கட்சியைப் பாதுகாப்பதைவிட நாட்டைக் கட்டியெழுப்புவதுதான் முக்கியமானது என்று சந்திரிகா குமாரதுங்க தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டியுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு, இது ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் நோக்கம் கொண்டது என குறிப்பிட்டுள்ளது.
மேலும் தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக கட்சியை காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
"கடுமையான அடக்குமுறை மிகுந்த தலைமைக்கு எதிராக மக்களும் கட்சிகளும் ஒருபோதும் கூடுவதில்லை. ராஜபக்ஷவை சுற்றி மக்களும் கட்சிகளும் தற்போது குடியிருக்கிறார்கள் என்றால் அது குற்றமற்ற நிர்வாகம் இருந்ததை காட்டுகின்றது" என மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.