அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று, தென் சீனக் கடலில் சீனாவால் செயற்கையாக அமைக்கப்பட்ட தீவுகளுக்கு 12 கடல் மைல்களுக்குள் பயணித்தது என்பதை, அமெரிக்க பாதுகாப்புச் செயலர், ஆஷ்டன் கார்ட்டர், உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அமெரிக்க செனட்டின் பாதுகாப்புச் சேவைகள் குழுவின் முன்னர் அளித்த சாட்சியத்தின் போது, அமெரிக்காவுக்கு அந்தப் பகுதியில் பயணிக்க உரிமை இருப்பதாகக் கார்ட்டர் கூறினார்.
முன்னதாக சீன வெளியுறவு அமைச்சகம், சீனாவில் உள்ள அமெரிக்கத் தூதரை அழைத்து, சீனா தனது நிலப்பரப்பு என்று சொந்தம் கொண்டாடும் இந்த செயற்கைத் தீவுகளுக்கு அருகே தனது கப்பலைப் பயணிக்க வைக்க அமெரிக்கா எடுத்த முடிவு குறித்து தனது எதிர்ப்பை வெளியிட்டது.
சீனாவின் இந்த உரிமை கூறல்கள் அமெரிக்காவாலும், இந்தப் பிரதேசத்தில் உள்ள பிற நாடுகளாலும் எதிர்க்கப்படுகின்றன.
இப்பகுதியில் சர்வதேச சட்டத்திற்கமைய சாதாரணமான நடவடிக்கைகள்தான் எடுக்கப்படுவதாக அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்துக்காகப் பேசிய அதிகாரி ஒருவர் கூறினார்.
