உள்நாட்டு முயற்சியாளர்களுக்கே முதலிடம்: ரவி கருணாநாயக்க
உள்நாட்டுத் தொழில் முயற்சியாளர்களுக்கே முதலிடம் வழங்கப்பட்டு, அதனூடாக நாட்டுக்குக் கிடைக்கும் நன்மை கருத்திற்கொள்ளப்படுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாத்தின்போது அவர் இதனை தெரிவித்தார்.
வெளிநாட்டவர், இந்நாட்டில் காணி வாங்குவதற்கான காணிக் கொள்கை எந்த விதத்திலும் இலகுவாக்கப்படவில்லை. இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட முதலீட்டுடன் வரும் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் நூறு வீத வரிவிலக்களித்துள்ளதாகவும் ஏனையோருக்கு நூற்றுக்கு நூறு வீதம் வரி விதிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது அனைவரினதும் கடமையெனவும், இதைவிடச் சிறந்த சிந்தனைகள் முன்வைக்கப்படுமானால் அவற்றிற்கு இடமளிக்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
