புதிய அரசியல் யாப்பு, இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்கள் தீவிரம்
புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும் இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளடங்கப்படுமா இல்லையா என்பது தொடர்பான பேச்சுக்களும் தற்போது தீவிரமாக அடிபடுகின்றன. ஆனால் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாக போர்க்குற்ற விசாரணை நடைபெறுமா அது சர்வதேச விசாரணையா அல்லது உள்ளக விசாரணையா என்ற பேச்சுக்கள் கைவிடப்பட்டுள்ளன. விசாரணை நடைபெறுமா என்பது கூட சந்தேகமாகவே இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
புதிய அரசியல் யாப்பு என்று பேசப்படும் போது முக்கியமாக மூன்று விடயங்களை அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும். ஒன்று இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுக்களை பாதிக்கப்பட்ட சமூகங்களின் பிரநிதிகளுடன் ஆரம்பிக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும். இரண்டாவது வடக்கு கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை அங்கீகரிப்பதற்கான மனநிலையை சகல சிங்கள அரசியல் கட்சிகளிடமும் உருவாக்க வேண்டும். மூன்றாவது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்பதும் தமிழ் மக்கள் மீதான இராணுவ செயற்பாடுகள் இல்லாமல் செய்யப்படும் என்ற விடயங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆகவே சிங்கள அரசியல் கட்சிகளை சாந்தப்படுத்தக்கூடிய வேலைத் திட்டங்களை மாத்திரமே அரசாங்கத்தால் செய்யக்கூடிய நிலைமை பொதுவாகக் காணப்படுகின்றது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
புதிய அரசியல் யாப்புக்கான ஏற்பாடுகளில் வடக்கு கிழக்கு மாகாணம் இணைப்பு மற்றும் தேசியம் பற்றிய பேச்சுக்களை இல்லாதொழிப்பதற்கான சரத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சமஉரிமை என்ற அடிப்படையிலும் ஒற்றையாட்சித் தன்மையின் இயல்புக்கு பாதகம் ஏற்படாத வகையிலும் இலங்கைத் தேசியம் என்பதை நிலை நாட்டக்கூடிய முறையிலும் ஏற்பாடுகள் புதிய யாப்பில் இருப்பதாக மூத்த சட்டத்தரணி ஒருவர் கூறியுள்ளார். அத்துடன் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டாலும் அது பொவான அடிப்படையில் அமையக்கூடிய வகையிலும் தனியே மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் குற்றம் என்ற அடிப்படையில் தீர்ப்புகளை வழங்கக்கூடிய முறையில் ஏற்பாடுகள் உள்ளதாகவும் அந்த சட்டத்தரணி கூறியுள்ளார்.
ஆகவே புதிய அரசியல் யாப்பு என்று அரசாங்கம் அவசரப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அதவாது போர்க்குற்ற விசாரணையை சமாளிப்பதும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானங்களை அப்படியே கைவிடுவதும் முதலாவது காரணம். இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று கூறி தனியே தமிழர் தரப்புடன் மாத்திரம் பேச்சு நடத்துவதை தவிர்ப்பது இரண்டாவது காரணம். இந்த இரு காரணங்களின் அடிப்படியில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முன்னர் செயற்பட்டது. ஆனால் இந்திய அமெரிக்கா போன்ற நாடுகள் அப்போது கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
ஆகவே ஜெனீவா தீர்மானத்திற்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை இலகுவாக புரிந்து கொள்ளமுடிகின்றது. இந்த இடத்தில்தான் தமிழர்தரப்பு என்ன செய்யப் போகின்றது என்ற கேள்விகள் தொக்கி நிற்கின்றன. புதிய யாப்புக்கான வேலைத் திட்டங்களில் இரகசியமாக பங்கெடுத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலருக்கு இந்த விடயங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அல்லது அவர்களும் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறினாலும் இதனை எவ்வாறு தடுத்து நிறுத்துவது அல்லது தமிழ் மக்களுக்கு ஏற்ற முறையில் அதாவது குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வையாவது வழங்கக்கூடிய முறையில் எவ்வாறு யோசனைகளை முன்வைப்பது என்பதில் சிக்கல் நிலை இருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
