இரு மொழிகளிலும் அரச கடிதங்களை அனுப்புதல் கட்டாயம்
பொது அரச கடிதங்களை அனுப்பும் போது அவை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் அனுப்பி வைக்கப் படுதல் கட்டாயமானதாகும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அமைச்சின் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
நிர்வாக அபிவிருத்தி நிறுவனத்தில் இடம்பெற்ற 2016ஆம் ஆண்டிற்கான முதலாவது மாவட்ட செயலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த விடயத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமாயின் அது குறித்து தமக்கு அறிவிக்குமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பொது அரச கடிதங்கள் சிங்கள மொழியில் கிடைப்பதனால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகின்றனர். இவ்வாறான அசௌகரியங்களைத் தீர்க்கும் வகையில் இரு மொழிகளிலும் கடிதங்களை அனுப்பும் நடவடிக்கையை அவர் கட்டாயமாக்கியுள்ளார்.
வடக்கில் தற்போதும் பொது அரச கடிதங்கள் சிங்கள மொழியிலேயே கிடைப்பதாக தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், நாட்டில் தமிழும் அரச கரும மொழியே எனத் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
