Saturday, 20 February 2016

தமிழ் தெரிந்த ஆளுநர்': ரெஜினோல்ட் குரேவுக்கு முதல்வர் வரவேற்பு

இலங்கையில் வடக்கு மாகாணசபைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக அந்த மாகாணத்தின் புதிய ஆளுனராக பொறுப்பேற்றுள்ள ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
தனது பதவியை பொறுப்பேற்ற அவருக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடந்த வரவேற்பு நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இங்கு தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டதுடன் ஆங்கிலம், தமிழ், சிங்களம் என மும்மொழிகளிலும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே உரையாற்றினார்.
வடபகுதி மக்களின் காணி, மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை தான் நன்கு அறிந்திருப்பதாகவும், அதனை நிவர்த்தி செய்ய தன்னால் முடிந்த நடவடிக்கையை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
சந்தேகங்களை நீக்கி நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண சபைக்கும் முதலமைச்சருக்கும் ஒத்துழைப்பு வழங்க தான் தயார் எனவும் தெரிவித்தார்.
ஆளுநர் ரெஜினோல்ட் குரே தமிழ் மொழி பேசத் தெரிந்தவராக இருப்பதாலும் இதர அரசியல் அனுபவங்கள் இருப்பதாலும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அவர் பணியாற்றுவார் என்று இங்கு உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டார்.
இதனிடையே, புதிய ஆளுநர் அதிகாரங்களை மக்கள் பிரதிநிதிகளுக்கு பகிர்ந்தளிப்பதில் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும் என்று இங்கு உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கோரிக்கை விடுத்திருக்கின்றார்
Loading...