ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள பல்வேறு பிரயத்தனங்களையும் நான் மேற்கொண்ட நிலையில் அவை அனைத்தும் எட்டாக் கனியாகப் போனதால் அவற்றை எனது முகநூலில் பதியும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பகிரங்கமாகப் பதிவதால் உங்களுக்கு எந்தச் சேதாரங்களும் ஏற்படப் போவதில்லை. நல்லவைதான் நடக்கும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் நீங்கள் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயங்களை மேற்கொள்வதில் ஒரு தொய்வு நிலையேற்பட்டுள்ளது. இதனைப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். 33,000 வாக்குகளை முதன்முதலில் உங்களுக்குத் தந்த மக்கள் மனதில் இவ்வாறானதொரு ஏக்க நிலைமை தோன்றுவது ஆச்சரியமான ஒன்றல்ல.. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பதற்கு மேலாக ரிஷாத் பதியுதீன் என்ற மனிதருக்காகவே அதிக எண்ணிக்கையிலான மக்கள் உங்களது கட்சிக்கு வாக்களித்தனர்.
அம்பாறை மாவட்ட முஸ்லிம் தேர்தல் களம் என்பது நீறுபூத்த நெருப்புப் போன்றது. சவால்களை எதிர்கொண்டே அனைத்தையும் சமாளிக்க வேண்டியுள்ளது. இது அரசியல்வாதிகளுக்கு மட்டுமின்றி அந்த மாவட்ட மக்களும் பொருத்தமானது.
மிக, அதீத துணிச்சலுடன் உங்களை ஆதரித்த அந்த 33,0000 வாக்காளர்களும் இன்று தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோமோ என்று சிந்திக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உங்களை ஆதரித்ததற்காக மாற்றுக் கட்சிகளால் அவர்கள் பழிவாங்கல்களையும் எதிர்கொள்ள நேரும்.
அம்பாறை மாவட்டம் என்பது முஸ்லிம் தரப்பை பொறுத்த வரை முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையாக வர்ணிக்கப்பட்டாலும் அது அப்படியல்ல எங்களால் அதனைத் தகர்க்க முடியும் என்ற துணிச்சலில் உங்களுக்காக வாக்களித்தவர்கள்தான் இந்த 33,0000 பேரும்.
ஆனால், இன்று அவர்கள் நாதியற்ற நிலைமைக்கு தள்ளப்படுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. தேர்தல் காலத்தில்தான் எல்லோரும் வருவார்கள் செல்வார்கள் என்ற பொதுசனத்தாரின் மாமூலான சொற்பிரயோகத்துக்குள் நீங்களும் இன்று சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் நீங்கள் உடனடியான கவனத்தைச் செலுத்துங்கள்..அந்த மாவட்டத்துக்கு மாதத்தில் ஒரு தடவையாவது சென்று மக்களைச் சந்தியுங்கள். அவர்களது குறைபாடுகளைக் கேட்டறியுங்கள். அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள். செய்ய முடியாவிட்டாலம் குறைபாடுகளைக் கேட்டறியுங்கள். “ரிஷாத் எங்களுக்கு ஒன்றும் செய்யாவிட்டாலும் எங்களை வந்து பார்த்தாரே” என்று திருப்திப்பட்டு நன்றி உணர்வு கொள்ளும் தன்மை கொண்டவர்கள் அந்த மாவட்ட முஸ்லிம் மக்கள்.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் உங்களுக்கு அளிக்கப்பட்ட 33,000 வாக்குகள் இன்னொரு எதிர்கால தேர்தலில் நிச்சயமாக 13,000 ஆக குறையவும் கூடாது அல்ல..
இப்போது அம்பாறை மாவட்டத்தில் உங்கள் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் எவரும் இல்லை. உங்களால் வளர்த்து விடப்பட்டு பதவி கொடுத்த பலரும் கொழும்பில் ஏஸி அறைகளில் கடமை புரிகிறார்கள். அவர்கள் தங்களது மாவட்டத்துக்குச் சென்று கட்சிப் பணிகளை முன்னெடுப்பதும் இல்லை.. மக்களைச் சந்தித்துப் பேசுவதும் இல்லை ஆனால், கச்சிதமாக காய் நகர்த்தி காரியங்களைச் செய்து கொள்கின்றனர். இவ்வாறான நிலை தொடர்ந்தால் அம்பாறை மாவட்டத்தில் உங்கள் கட்சிபை் பணிகள முன்னெடுப்பது யார்?
நீங்கள் கொழும்பில் பதவி கொடுத்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், தங்களது பிள்ளைளுக்கு மம்மி, டடி, அங்கிள், ஆன்டி என கொழும்பில் இங்கிலீஸ் படிப்பித்துக் கொடுக்கிறார்களாம்.
ஊருக்குப் போகாத இவர்களை கொழும்புக்காவது போய் சந்திப்போம் என வருபவர்களை சந்திக்கவும் விரும்பாத அளவுக்கு அவர்களிடம் இப்போது கௌரவப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
நீங்கள் கொழும்பில் பதவி கொடுத்தவர்களில் ஒருவரை எங்களது ஊர் பகுதியை சேர்ந்த சாதாரண ஒரு மகன் சந்திக்க வந்த போது
I AM SORRY, I CANT MEET HIM NOW என ஆங்கிலத்தில் கூறி செய்தி அனுப்பினாராம்.
நீங்கள் கொழும்பில் பதவி கொடுத்தவர்களில் இன்னொருவரை எங்களது கிராமத்தவன் சந்தித்த போது அவர் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளை எல்லாம் எவ்வாறு மக்கள் ஏற்றுக் கொள்வர்.
உங்களிடம் காணப்படும் மனிதப் பண்பு, எளிமையான நடைமுறைகள், மனிதாபிமானம், தாழ்மைமிக்க தன்மைகள் இவர்களிடம் சற்றும் இல்லை. அர்ப்பனுக்கு பௌசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான் என்ற நிலைதான் இன்று இவர்களிடம் காணப்படுகிறது. இந்த நிலை தொடர்வது உங்களுக்கும் சரியல்ல…
அம்பாறை மாவட்டத்தில் உங்களது கட்சிப் பணிகளை இன்று முன்னெடுத்துச் செல்ல யார் உள்ளனர் என்பதனை நீங்கள் சிந்தியுங்கள். ரிஷாத் பதியுதீன் என்ற மனிதனுக்காவே வாக்களிக்கிறோம் என்று கூறி வாக்களித்த மக்களின் இன்றைய நிலைமைச் சிந்தித்துப் பாருங்கள்.
நீங்கள் எம்.பியாகி, அமைச்சரான பின்னர் கொழும்பில் உள்ள உங்கள் அமைச்சின் ஏ.ஸி அறைக்குள் நீங்கள் சுகம் அனுபவிக்கவில்லை. தொடர்ந்து வன்னி நிலப்பரப்பிலேயே நின்றுமக்களை வேகா வெய்யில் சந்தித்து பேசி, பல்வேறு விடயங்களைச் செய்து வருகிறீர்கள். உங்களுக்கு மன்னாரில் தாகம் எடுக்கும் போது சாதாரண மக்கள் அருந்தும் உப்பு நீரையே நீங்களும் அருந்துவதாகவும் தெரிந்து கொண்டேன். ஆம், இவ்வாறெல்லாம் உங்களை வெற்றி பெறச் செய்த மக்களுக்காக நீங்கள் உழைக்கிறீர்கள்.
ஆனால் உங்களால் பதவிகள் பெற்ற சிலர் கொழும்பு ஏ.ஸி அறைகளுக்குள் இருந்து கொண்டு குடிப்பதற்கு குழாய் நீர் வேண்டாம். மினரல் வாட்டர் ஓடர் பண்ணிக் குடிக்கிறார்களாம்.(குருவை மிஞ்சிய சிஷ்யர்கள்தான் போங்க)
இறுதியாக,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது அதன் தலைவர் அமைச்சர் ஹக்கீமினால் தவறாக வழி நடத்தப்படவில்லை. அவரைச் சுற்றியுள்ள சிலராலேயே அந்தக் கட்சி இன்று இந்த நிலையை அடைந்துள்ளது.
இவ்வாறானதொரு நிலையே உங்கள் கட்சிக்கும் ஏற்பட வேண்டுமா? சிந்தித்து செயற்படுங்கள்.. காலம் இன்னும் உங்கள் கையை விட்டு ஓடவில்லை.
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

