முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிட்ட கருத்தை வாபஸ்பெற வேண்டும்!
அரசியல் பிழைப்புக்காக இனக்குரோதங்களை வளர்த்து வங்குரோத்து அரசியல் செய்கின்ற நிலை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
காத்தான்குடியிலுள்ள அவரது அலுவகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களைப் போலல்லாது தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நல்லாட்சி சூழ் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் முஸ்லிம்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள பல கருத்துக்கள் கண்டிக்கத்தக்கதாகும்.
கடந்த 15மாத காலத்தில் மிகத்தீவிரமாக மஹிந்த அரசாங்கத்தில் ஆட்டம்போட்ட பொதுபல சேனா ஞானசார தேரரைக் கூட அடக்கி வாசிக்கின்ற ஒரு நிலையினை நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இவ்வாறான இன ரீதியான கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் விதைத்துவருவதை அனுமதிக்கமுடியாது.
கடந்த காலங்களில் பல வகையான கசப்பான விடயங்கள் ஒவ்வொரு இனத்திற்கும் எதிராக இடம்பெற்றிருந்தாலும் இப்போது இலங்கையர் என்ற ரீதியில் நாட்டில் சமாதானத்தினையும், சகோதரத்ததுவத்தினையும் கட்டியொழுப்பி வருகின்றபோது மீண்டும் ஒரு இனக்கலவரத்தினை ஏற்படுத்துவதற்காக, முஸ்லிம்கள் தமிழ் மக்களின் வறுமை நிலையைப் பயண்படுத்தி மதம் மாற்றுகின்றனர் என்ற கருத்தையும் குறிப்பாக தமிழ் மக்கள் முஸ்லிம் ஒருவருக்கு வாக்களித்துள்ளீர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் எண்ணம் உங்களுக்கு இல்லாவிட்டால் இன்னுமொரு தமிழருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ள விடயம் ஒரு ஜனநாயக நாட்டிலே ஜனநாயக ரீதியாக ஒருவர் கொண்டிருக்கின்ற ஜனநாயகத்தை மதிக்காமல் வற்புறுத்தி எவ்வாறு கடந்த காலங்களில் அடக்குமுறைக்கு மத்தியில் வாக்குகள் அளிக்க பணிக்கப்பட்டதோ அவ்வாறான ஒரு நிலைமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உருவாக்கப்பட்ட இந்த நல்லாட்சியிலும் சொல்லப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் பற்றியும் பேசியிருக்கிறார். அவருக்கு வரலாறு தெரியாது. வரலாற்றை பின்னோக்கி அவர் படிக்கவேண்டும் முஸ்லிம்களுக்கு கொடுக்கவேண்டிய வளப்பங்கீடுகள், ஆயுதமுனையில் அதிகாரிகள் மிரட்டப்பட்டு வழங்கப்படாததால்தான் இவ்வாறு பிரிக்கப்பட்டது என்பதை அவர் அறிந்துகொள்ளவேண்டிய தேவைப்பாடு அவருக்கு உள்ளது.
முஸ்லிம்களை பொறுத்தவரையில் எந்தவொரு தருணத்திலும் உதவி செய்கின்ற போது இன மத மொழி பேதங்களுக்கப்பால் சென்று மனித நேயத்துடன் உதவி செய்வதே வழக்கமாகும்.ஆனால் முஸ்லிம்கள் செய்யும் இந்த உதவிகளை கொச்சைப்படுத்தி தனது அரசியல் இருப்பினை தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வாறு வெளியிடும் நச்சுக்கருத்துக்களை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென நான் வேண்டுகோள் விடுகின்றேன். அத்தோடு இவர் முஸ்லிம்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் எமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
வறுமையை முன்னிலைப்படுத்தி மதமாற்றும் செயலில் ஈடுபடும் முஸ்லிம்களை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்து முஸ்லிம்களை பாதிக்கச் செய்துள்ளது.இந்தக்கருத்தினை அவர் வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும். இல்லையேல் இவருக்கு எதிராக மத நிந்தனை என்ற விடயத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் அது தொடர்பில் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
கடந்த காலத்தில் இனவாதத்தை கக்கிக்கொண்டிருந்த இரு தமிழ் தேசியகூட்டமைப்பு உறுப்பினர்களை மட்டக்களப்பு தமிழ் மக்கள் தோற்கடித்தனர். அதே போன்று இவர் போன்றோரை மக்கள் தெரிவு செய்யக்கூடாது.அரசியல் கலாசாரம் இப்போது மாற்றம் கண்டுவருகின்றது. மொழிரீதியாகவும் இனரீதியாகவும் சிந்திக்கின்ற நிலை மாற்றம் கண்டு வருகின்றது.
எந்தவொரு மதமும் இன்னுமொரு மதத்தினை நிந்திக்கவேண்டும், தூசிக்கவேண்டும் என்று கூறவில்லை. அவர் நூறுவீதம் தனது மதத்தினை பின்பற்றுபவராக இருந்தால் இவ்வாறான சிந்தனை அவருக்கு ஏற்பட்டிருக்காது மாறாக தொடர்ந்து அரசியலில் தன்னை தக்கவைத்துக்கொள்வதற்காக மக்கள் மத்தியில் நச்சுக்கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.
காணாமல்போனோர், சம்பூர் காணி பிரச்சினை, அரசியல் கைதிகள் விடயம், என எத்தனையோ பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு இருக்கும்’போது இந்த தருணத்தில் இவரின் இது போன்ற நச்சுக்கருத்துக்கள் இனங்களுக்கிடையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்திக் கூறவிரும்புகின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
