Saturday, 2 April 2016

சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிராக முஸ்லிம் மக்களும் போராட்டம்!

சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிராக முஸ்லிம் மக்களும் போராட்டம்!
சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிராக முஸ்லிம் மக்களும் போராட்டம்!
திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் அமையவுள்ள அனல் மின் நிலையத்திற்கு எதிராக மூதூர் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களும் மாபெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். 

மூதூர் பசுமை குழுவின் ஏற்பாட்டில் நேற்று மதியம் நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்திலும் பேரணியிலும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

ஐும்ஆத்தொழுகையின் பின்னர் அங்குள்ள பள்ளிவாசலில் பிரார்த்தனைகளை முடித்து விட்டு கண்டனப் பேரணியில் ஈடுபட்டனர். மூதூர் பெற்றோல் நிரப்பு நிலைய பகுதியிலிருந்து மூதூர் பள்ளிவாசல் வரை ஊர்வலமாகச் சென்று தமது கண்டனத்தையும் - எதிர்ப்பையும் அவர்கள் வெளிப்படுத்தினர். 


இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்க வேண்டாம் என்று மும்மொழிகளிலும் சுலோகங்களை ஏந்தி இருந்தனர். ஆர்ப்பாட்டப் பேரணி முடிவில் பிரதேச செயலாளரை சந்தித்து உத்தேச சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தை கைவிடுமாறு ஜனாதிபதியைக் கோரும் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது. 

மூதூர் பிரதேசத்திலுள்ள சம்பூர் பகுதியில் இந்தியா மற்றும் ஜப்பான் உதவியுடன் இரு அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கு கடந்த மஹிந்த அரசால் தீர்மானிக்கப்பட்டு அதற்கான காணிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது அந்த அனல் மின் நிலையத்திற்கான ஆரம்ப கட்டப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்ற நிலையில் இதற்கான எதிர்ப்புகளும் வலுப்பெற்று வருகின்றன. அந்தப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்திருந்த கால கட்டத்தில் இந்த மின் நிலையத்திற்கான இடம் தேர்வாகியிருந்தது. 

தற்போது அந்த பகுதியில் மக்கள் மீளக்குடியேறி வருகின்ற நிலையில், அவர்களுக்கும் சூழலுக்கும் இந்த மின் நிலையம் பாதிப்பாக அமையும் என சுற்றச்சூழல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பாக இலங்கை - இந்தியா இரு நாடுகளுக்குமிடையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பதவிக் காலத்தில் 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. 512 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 500 மெகா வாட் மின் உற்பத்தியை இலக்காக கொண்டு அனல் மின் நிலையத்திற்கு 540 ஏக்கர் காணி அடையாளமிடப்பட்டது. மக்கள் குடியிருப்பு இல்லாத காலப்பகுதியில் அனல் மின் நிலையம் தொடர்பான சுற்றுச் சூழல் அறிக்கை தயாரிக்கப்பட்டது என்றும், மீள் குடியேற்றத்திற்குப் பிந்தைய காலத்திற்கு அது பொருந்தாது என்றும் மக்கள் கூறுகின்றனர். 

                                                     

                                                     

                                                     

Loading...