ஆளுனரின் கருத்துக்குக் கண்டனம்!
கொழும்பில் தமிழ் மக்கள் காணி வாங்குவது போல் வடக்கில் சிங்கள மக்கள் காணி வாங்குவதில் தவறில்லை என அரச ஆதரவு குடியேற்றத்துக்கும், சுயமான குடியேறுதலுக்கும் வித்தியாசம் தெரியாமல் வட மாகாண ஆளுனர் ரெஜினால்ட் குரே கூறியிருப்பது கண்டனத்துக்குரியதாகும் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் வாழும் மக்கள் எங்கும் வாழலாம், காணிகள் வாங்கலாம் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஆனால் நாட்டில் புரையோடிய இனமுரண்பாடுகளுக்கு காரணம் மக்களின் சுயமான குடியேற்றங்கள் அல்ல மாறாக அரச ஆதவுடனான குடியேற்றங்களே என்பதை மூத்த அரசியல்வாதியான ரெஜினோல்ட் குரே தெரிந்து கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியதாகும்.
ஒரு காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களே 95 வீதம் இருந்தனர். அத்தோடு சிங்கள மக்களும் சுயமாக குடியேறி வாழ்ந்தனர். இவர்களுக்கு மத்தியில் நல்ல பரிந்துணர்வும் சௌஜன்யமான வாழ்வும் இருந்தது. ஆனால் சுதந்திரத்துக்குப் பின் வந்த இனவாத பெருந்தேசியவாத கட்சிகளால் குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியால் வெளிமாகாண சிங்கள மக்கள் அரச ஆதரவுடன் அனைத்து கொடுபபனவுகளும் வழங்கப்பட்டு வடக்கு கிழக்கில் குடியேற்றப்பட்டனர். இதன் விளைவாகவே வடக்கு கிழக்கில் சிங்கள மக்கள் அதிகமாயினர்.அதேநேரம் அரச ஆதரவுடன் எந்தவொரு வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மகனும்; கொழும்பில் குடியேற்றப்படவில்லை.
ஆகவே அரச ஆதரவுடனான சிங்கள குடியேற்றம் என்பதற்கும் சுய விருப்பத்துடனான குடியேற்றத்துக்குமிடையிலுள்ள பாரிய வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் காலாகாலமாக வடக்கில் வாழ்ந்து புலிகளால் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்ட பின் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் மற்றும் போரினால் வெளியேறிய கிழக்கு முஸ்லிம்கள் மீண்டும் மீள் குடியேற அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது அரசின் கடமையாகும்.
அத்தோடு, போரின் காரணமாக வடக்கிலிருந்து வெளியேறிய சிங்கள மக்களும் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும். இதனை விடுத்து அரச ஆதரவுடன் சிங்கள மக்கள் வடக்கு கிழக்கில் குடியேற்றப்படுவதே இனவாத செயற்பாடாகும் என்பதை ரெஜினால் குரே போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது என முபாறக் மௌலவி மேலும் தெரிவித்தார்.
