மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்திய பல்லைக்கழக மாணவர்கள் மீது, பொலிஸார் தண்ணீர் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பல மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று (வியாழக்கிழமை) கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய பல்லைக்கழக மருத்துவ பீட மாணவர்கள், அங்கிருந்து பேரணியாக சென்றனர். இவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல முற்பட்ட காரணத்தினாலேயே, தண்ணீர் மற்றும் கண்ணீர்ப்புகை என்பவற்றை பிரயோகித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பல்லைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டம் மற்றும் கோட்டை ஆகிய பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அவிசாவளை மற்றும் கடுவலையிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் மருத்துவ பயிற்சியளிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இதற்கு பல்கலை மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறித்த மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், தமது பட்டப்படிப்பிற்கான அந்தஸ்து குறையுமென குறிப்பிட்டுள்ள மாணவர்கள், பணத்திற்காக சுகாதார அமைச்சு இதனை செய்வதாகவும் அரசாங்கம் இதில் தலையிட்டு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டுமெனவும் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.