நிதித்துறையில் வீழ்ச்சியா? மறுக்கிறது அரசு
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை அடிப்படையாக கொண்டு வர்த்தக சந்தையில் நெருக்கடியும் நிதித்துறையில் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் பிரசாரங்களை நிராகரிப்பதாக அரசு அறிவித்துள்ளது.
வங்கி நடவடிக்கைகள், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் நிதித்துறை நடவடிக்கைகள் வழமை போல் இடம்பெற்று வருவதாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்த அர்ஜூன் மகேந்திரனின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
இந் நிலையில் நிதியமைச்சரின் பரிந்துரை கிடைத்ததும் பிரதமருடன் கலந்துரையாடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுநரை நியமிப்பார். உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வெளிநாடு சென்றுள்ளார்.
அவர் நாடு திரும்பியதும் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் எனவும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
