பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீனுக்கு
முன்னாள் அமைச்சர் அஸ்வர் வாழ்த்து
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் மிகுந்த இஸ்லாமிய பற்றுக்கொண்டவர், நேர்மையானவர், அனைவரையும் மதித்து நடக்கக்கூடியவர். இன்றுள்ள சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு தலைமை வகிப்பதற்கு மிகவும் பொருத்தமானர் என முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணயின் செயலதிபருமான ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் தெரிவு செய்யப்பட்டுள்ளதைப் பாராட்டி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் சாஹிபை நான் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நன்கறிவேன். இந்திய முஸ்லிம்களின் தலைவர் மர்ஹும் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப், ரீ.கே. அப்துல் சமத் சாஹிப், பேராசிரியர் மௌலானா அப்துல் வஹாப், லோக் சபா உறுப்பினர் ஹாஜா மொய்னுத்தீன், பீர் முஹம்மது சாஹிப் போன்றவர்களோடு, அவரை நான் சென்னை மரைக்காயர்லெப்பை வீதியிலுள்ள முஸ்லிம் லீக் தலைமையகத்தில் சந்திப்பதுண்டு. அதனால் அவரோடு மிக நெருங்கிய நட்பு ஏற்பட்டது.
அவர் இஸ்லாமிய பற்றுக்கொண்டவர், நேர்மையானவர், அனைவரையும் மதித்து நடக்கக் கூடியவர். இன்றுள்ள சூழ்நிலையில் இந்திய முஸ்லிம்களுக்கு தலைமை வகிப்பதற்கு மிகவும் பொருத்தமானர் என்பதை என்னால் இலகுவில் ஊகித்துக் கொள்ள முடியும். இந்திய முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் தலைமைத்துவம் என்பது சாதாரணமாக சர்வதேச முஸ்லிம்களுக்கு தலைமைத்துவம் வகிப்பதைப் போன்றதாகும்.
ஆகவே, அவருடைய நீண்ட ஆயுளுக்கும், அவருடைய தலைமைத்துவத்தின் கீழ் இந்திய முஸ்லிம்கள் அரசியல் ரீதியிலும் ஏனைய விவகாரங்களிலும் வெற்றி பெறுவதற்கும் காயிதே மில்லத் முஹம்மத் இஸ்மாயில் சாஹிப் வகுத்துத் தந்த நன்நெறிப்பாதையில் முஸ்லிம்களை நடாத்திச் செல்வதற்கும் அவருக்கு இறைவன் துணைபுரிய வேண்டும். என்றும் கூறி, இலங்கை முஸ்லிம்கள் சார்பாக போராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் சாஹிபுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் --- என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.