Tuesday, 2 October 2018

நாட்டில் 24 மணித்தியாலங்களுக்குள் 5 கொலைச்சம்பவங்கள் பதிவு

நாடளாவிய ரீதியில் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் 5 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஊறுகஸ்மங்ஹந்திய, ஹல்துமுல்லை, சீதுவ மற்றும் ஜா-எல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இக்கொலைகள் பதிவாகியுள்ளதாகவும் இவற்றில் மூன்று கொலைகளின் பின்னணியில் பாதாள உலக குழுவினரின் தொடர்புகள் இருப்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஊறுகஸ்மந்திய – ரத்தொடவில பகுதியில் வீடொன்றிற்குள் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்யப்பட்ட ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு வீதியில் போடப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவத்தில் 37 வயதுடைய தீபால் ரணசிங்க மற்றும் 27 வயதுடைய சமில தீபால் ஆகிய இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஹல்துமுல்லை – முருதஹின்ன பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரு குழுக்களுக்கிடையிலான மோதலே இந்தக் கொலைக்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் சீதுவ பகுதியில் அலுவலகம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 30 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நீண்ட காலமாக காணப்பட்ட குரோதமே இந்தக் கொலைக்கு காரணம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்தோடு, ஜா-எல – வெலிகம்பிட்டிய பகுதியில் நேற்று முன்தினம் மதியம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் வண்டியில் சென்றுகொண்டிருந்த குறித்த பெண் மீது, பிறிதொரு மோட்டார் வண்டியில் வந்த இனந்தெரியாத சிலர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டமையால் இக்கொலை சம்பவம் பதிவாகியுள்ளது.

பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டுவிட்டு மினுவங்கொடை நோக்கி சென்றுகொண்டிருந்த களு அஜித் எனும் பாதாள உலக உறுப்பினரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக கூறும் பொலிசார், துப்பாக்கிப் பிரயோகத்துக்குள்ளான பெண்ணும், களு அஜித்தும் பயணித்த கார்கள் ஒரே நிற, ஒரே ரகத்தை சேர்ந்ததால் துப்பாக்கிதாரிகளின் இலக்கு மாறியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

சி.சி.ரி.வி. காணொளிகள், அறிவியல் தடயங்களை மையப்படுத்தி மேலதிக விசாரணைகளை ஜா – எல பொலிஸாரும், மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்திய குற்றத்தடுபுப் பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...