Thursday, 4 October 2018

ஆப்கானிஸ்தானில் 24 மணி நேரத்தில் 68 கிளர்ச்சியாளர்கள் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தானில் இராணுவம், பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையில் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் 68 கிளர்ச்சியாளர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தலீபான் கிளர்ச்சியாளர்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை தவிர ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் உட்பட பல்வேறு பயங்கரவாத இயக்கங்களும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன. இவர்களின் கொட்டத்தை ஒடுக்க ஆப்கான் இராணுவம் போராடி வருகிறது.

 இந்த நிலையில் ஆப்கான் தேசிய இராணுவப்படையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர். பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிகளை சுற்றிவளைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தினர்.

அதே சமயம் 120 போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்களின்  நிலைகளை குறிவைத்து வான்தாக்குதல்களை நடத்தின.

இராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் இந்த அதிரடி நடவடிக்கையில் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் 68 கிளர்ச்சியாளர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இவர்களில் 42 பேர் தரைவழி தாக்குதலிலும், 26 பேர் வான்தாக்குதலிலும் கொல்லப்பட்டதாக இராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 21 கிளர்ச்சியாளர்கள் படுகாயம் அடைந்ததாகவும், 2 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
Loading...