Monday, 1 October 2018

நாட்டின் சிறுவர் தலைமுறையைப் பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பு – ஜனாதிபதி

உலக சிறுவர் தினத்தில் சிறுவர் உரிமைகள் தொடர்பாகவும் சிறுவர்கள் சமூகத்தில் முகங்கொடுக்கும் சவால்கள் குறித்தும் பொறுப்பு வாய்ந்த அனைத்து தரப்பினரும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (01) முற்பகல் காலி, பலபிட்டிய ரேவத தேசிய பாடசாலையில் இடம்பெற்ற 2018ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

“அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக்கூடம், கனிஷ்ட பிரிவின் விஞ்ஞான ஆய்வுகூட கட்டிடம் ஆகியவற்றை ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு விருதுகளையும் பரிசில்களையும் ஜனாதிபதி வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, இன்றைய சிறுவர்கள் நாளை நாட்டை பொறுப்பேற்க உள்ள பிரஜைகளாகுமென்பதால் அறிவும் பண்பாடும் கொண்ட பிள்ளைகளாக அவர்களை உருவாக்குவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமாகுமென்று தெரிவித்தார்.

சிறுவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு பொறுப்புவாய்ந்த
நிறுவனங்கள் தாபிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த அனைத்து நடவடிக்கைகளினதும் நன்மைகள் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டுமென்று தெரிவித்தார்.

அறிவும் பண்பாடும் நிறைந்த சிறுவர் தலைமுறையை உருவாக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சிதிட்டங்களில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்பை ஜனாதிபதி பாராட்டினார்.

பாடசாலை கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்விக்காக எந்தவொரு அரசாங்கமும் ஒதுக்காத அளவு பெருந்தொகை பணத்தை தற்போதைய அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் சிறுவர்களுக்காக செய்யப்படும் முதலீடுகள் நாட்டுக்காக செய்யப்படும் முதலீடாகுமெனக் குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர்கள் பியசேன கமமே, நிஷாந்த முத்துஹெட்டிகம, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் த சில்வா, பலபிட்டிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான தயாரத்ன த சில்வா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பாடசாலை அதிபர் டி சிறிநந்த உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Loading...