Monday, 1 October 2018

காட்டுப் பன்றி இறைச்சி விற்பனைத் தடை – அமைச்சர்கள் இருவர் முக்கிய கலந்துரையாடல்

காட்டுப் பன்றி இறைச்சியை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ளத் தடையை நீக்குவதற்காகக் கொண்டு வரப்படவுள்ள அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக, நிலையான அபிவிருத்தி, வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகாவுடன் கலந்துரையாடத் தீர்மானித்துள்ளதாக, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த கலந்துரையாடலை இந்த வாரத்துக்குள் விரைவாக முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.

காட்டுப் பன்றி இறைச்சி விற்பனையில் காணப்படும் தடையை நீக்குவது குறித்து, தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நிறைவடைந்து, அதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிதற்கு முன்பாக, இதற்குப் பொறுப்பான அரச நிறுவனங்களுடன் கலந்துரையாடி, தேவையான இறுதி முடிவுகளை எடுப்பதற்காகவும், காட்டு மிருகங்களால் உற்பத்திகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, விவசாயிகள் முன்வைக்கும் முறைப்பாடுகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில், அவதானம் செலுத்தப்படவுள்ளதாக, விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

காட்டுப் பன்றிகள், குரங்குகள் உள்ளிட்ட மிருகங்களால், விவசாய உற்பத்திகளுக்கு ஏற்படும் பாதிப்புகளால், விவசாயிகள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர் அமரவீர, விவசாயிகளையும் விலங்குகளையும் பாதுகாப்பதன் மூலம், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளன என்றும் தெரிவித்தார்.

எனவே, இதற்கு நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
Loading...