Sunday, 21 June 2015

காலமாகி விட்டதா தமிழ் மக்களுக்கான தீர்வு ?

 மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்
சுதந்திர இலங்கையின் ஊடகங்கள் அதிகம் உபயோகித்த ஒரு tna2015சொல் எதுவென கேட்டால் அது "தமிழ் மக்களுக்கான தீர்வு" என்கின்ற சொல்லாடல்தான் என்று அடித்து சொல்லலாம்.இது சமஷ்டியில் தொடங்கி மாவட்ட சபை மாகாண சபை என்று ஒருபுறமும் தமிழீழம், தன்னாட்சி அதிகார சபை, என்று மறுபுறமுமாக அல்லோல கல்லோலப்பட்டு இறுதியாக 13வது சட்டதிருத்தத்தில் வந்து நின்றது.
 அதன்படி உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு காணி போலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளைகடந்த கால ஆட்சியாளர்கள் தட்டிக்கழித்து வந்தனர் . ஆனபோதிலும் அதுபற்றிய கோரிக்கைகளும் அவற்றுக்கு ஆதரவான இந்தியா போன்ற சர்வதேச நாடுகளின் நெருக்குவாரங்களும்கூட தொடர்ச்சியாக இருந்தே வந்தன. அதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த கூட தன 13க்கும் அப்பால் சென்று தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பேன் என்று பொய்யாகவேனும் வாக்குறுதிகளை வழங்க வேண்டியிருந்தது.அது ஒரு வகையில் தீர்வு ஒன்றின் அவசியத்தை தொடர்ச்சியாக உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள தமிழர் தரப்புக்கு வாய்ப்பான காலமாக இருந்தது.

 தமிழ் தேசிய கூட்டமைப்பும் காலத்துக்கு காலம் தமிழ் மக்களின் தீர்வு என்கின்ற விடயத்தை வைத்தே ஒவ்வொரு தேர்தலையும் எதிர்கொண்டு தமது பதவிகளை புதுப்பித்து கொள்வது வழக்கமானதொன்றாய் இருந்து வருகின்றது. இந்த தீர்வு என்கின்ற ஒரு சொல்லாடலை வைத்தே மாவையார் போன்றவர்கள் அடிக்கடி அரசுக்கு நிபந்தனைகளும் காலக்கெடுக்களும் விதிப்பது தமிழ் மக்கள் மறக்கமுடியாத விளையாட்டுக்கள் ஆகும்.

இலங்கைக்கு விஜயம் செய்யும் இராஜதந்திரிகள் அனைவரிடமும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மூட்டுகின்ற கோள்களில் முதன்மையானதும் முக்கியமானதும் இந்த தமிழ் மக்களுக்கான தீர்வு என்பதேயாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் இந்திய விஜயம், அமெரிக்கவிஜயம், தென்னாபிரிக்க விஜயம், இங்கிலாந்து விஜயம், என்று எங்குசென்றாலும் அங்கு "எமது மக்களுக்கான தீர்வு பற்றி பேசியுள்ளோம்.  எமது மக்களுக்கான தீர்வு பற்றி எடுத்து சொன்னோம் அதை அவர்கள் உன்னிப்பாக கேட்டுக்கொண்டனர் விரைவில் அரசுக்கு அதுபற்றி அறிவுறுத்துவதாக எமக்கு வாக்களித்துள்ளனர்" என்கின்ற வார்த்தைகள் ஒவ்வொரு தமிழ் மக்களும் கேட்டு புளிச்சுப்போன வார்த்தைகள் ஆகும்.

 அதைதொடர்ந்து அரசுக்கு நெருக்கடிகள் கூடப்போகின்றது  இனி இவர்கள் தப்பிக்க முடியாது விரைவில் எமக்கான தீர்வு கிடைத்தேயாகும் என்பது தமிழ்தேசிய ஊடகங்களின் பொழிப்புகள் சரமாரியாய் கொட்டும்.

 தேர்தல்கள் வந்தால் நமது தீர்வுக்கு காலம் கனிந்து விட்டது நமது ஒற்றுமையை உலகுக்கு காட்ட வேண்டும், சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கின்றது, நல்லதொரு தீர்வு நெருங்கி வரும் வேளை ஒற்றுமைகாப்பது தமிழ் மக்களின் கடமை என்பதையும் நம்பி மக்கள் ஏமாந்ததுதான் மிச்சம்.
 மகிந்த இருக்கும் வரை 13 பற்றியாவது பேசப்பட்டது இப்போது அவர்கள் 19, 20 என்று எங்களை கைவிட்டு விட்டு போய்க்கொண்டே இருக்கின்றார்கள்,  என்று அங்கலாய்க்கும் நிலைக்கு இன்று வந்துள்ளோம்.

 ஆனால் கடந்த காலங்களில் இந்த தீர்வுகள் முன்வைக்கப்படும் போதெல்லாம் அவ்வப்போது இருக்கின்ற எதிர்கட்சிகள் அவற்றை குழப்புவதில் போய் அது முடியும்.தீர்வு திட்டங்களும் ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்படும்.பண்டா- செல்வா ஒப்பந்தம் ஆனாலும் சரி சந்திரிகாவின் தீர்வு பொதியானாலும் சரி ஐக்கிய தேசிய கட்சி அவற்றையெல்லாம் கிழித்தெறிந்த கதைகள் நாம் கடந்துவந்த நிஜங்களே ஆகும்.

 ஆனால் இவற்றுக்கெல்லாம் சளைக்காமல் எமது பக்கத்து அட்டைக்கத்தி வீரர்களும் இந்த தீர்வு குறித்து ஓயாது குரல் கொடுத்தே வந்திருக்கின்றார்கள்.ஆனால் இப்போது மட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த தீர்வு விடயத்தில் பேசா மடந்தைகளாக ஏன் பவனி வருகின்றனர்? புதிய ஜனாதிபதியின் வருகைக்கு ஓயாது உழைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்றைய ஜனாதிபதிக்கு நிபந்தனை அற்ற ஆதரவு தெரிவித்து அவரை வெற்றியீட்ட செய்தனர்.அவரது 100 நாள் வேலைத்திட்டத்தில் தேசிய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டியுள்ளதால் அதில் தமிழ் மக்களின் தீர்வு விடயத்தை இணைக்குமாறு வேண்டுவது சரியில்லை என்று பெரிய மனதுடன் ஒதுங்கி கொண்டனர்.அதன்பின்னர் உருவாகும் தேசிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து பேசும் என்றனர் ஆனால் தேசிய அரசாங்கம் உருவான போது அதில் பங்கெடுக்காமல் விலகி நின்றதன் ஊடாக தமது பெரும் தன்மையை காட்டிகொள்வதாக நடித்தனர்.அதனூடாக புதிய ஜனாதிபதிக்கு மட்டுமல்ல புதிய அரசாங்கத்துக்கும் புதிய பிரதமருக்கும் தமிழ் மக்களுக்கான தீர்வு என்னும் தலையிடியை கொடுக்காமல் நல்ல பேர் எடுத்துள்ளனர்.ஆனாலும் தேசிய கொள்கை வகுப்பு நிறுவனமாக புதிய ஜனதிபதியால் உருவாக்கப்பட்ட தேசிய நிறைவேற்று சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கம் வகித்தும் அதி கூட தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றி இன்னும் வாய் திறக்க வில்லை.
 தமிழ் மக்களுக்கான தீர்வு ஒன்றினை உருவாக்க கூடிய தேசிய நிறைவேற்று சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கம் வகிக்கும் இந்த சந்தர்ப்பம் போல இனிமேல் ஒரு சந்தர்ப்பம் கிடைப்பது அருமை.தமிழ் மக்களின் அல்லது சிறுபான்மை மக்களின் வாக்குகளால்தான் வென்றேன் என்னும் நன்றியை மறவாத ஒரு ஜனாதிபதியை இனி காண்பது அருமை.எதிர்கட்சி எது? ஆளும் கட்சி எது என்று தெரியாத தேசிய அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற கூட்டரசாங்கம் ஒன்று தீர்வை பற்றி பேசினால் குழப்புவதற்கு எதிர்க்கட்சியே இல்லாத ஒரு அருமையான காலம் இனி கிடைப்பது அருமையிலும் அருமை.சர்வதேசத்துக்கு காட்டுவதற்காக கிழக்கு மாகானசபைதேர்தலிலும் வடக்கு மாகாண சபை தேர்தலிலும் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்து ஆணையும் தந்துள்ள நிலைமை எந்நாளும் கிடைக்காது.ஆனால் இவையனைத்தையும் வைத்துக்கொண்டு ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றி பேசுவதை நிறுத்திகொண்டுள்ளது.ஏன் தமிழ் மக்களுக்கான தீர்வுக்காக கடந்த காலங்களைப்போல காலக்கெடு எதையும் விதிக்க தயங்குகின்றது? தமிழ் மக்களுக்கான தீர்வு என்பது காலமாகி விட்டதா?
Loading...
  • தேர்தல் முறை மாற்றத்தின் பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும்20.04.2015 - Comments Disabled
  • திகா மடுள்ள மாவட்டம் NDPHR அபிவிருத்தியை நோக்கி 12.08.2015 - Comments Disabled
  • தப்பியது உலகத் தமிழர் பேரவை….?11.06.2015 - Comments Disabled
  • பிரபாகரன் கொழும்பு வந்தார்..! கருணாவிற்கு நடந்தது என்ன…?24.07.2015 - Comments Disabled
  • Budget 2016; How Tamils Can Go Along26.11.2015 - Comments Disabled