அமெரிக்காவும் கியூபாவும் இருநாடுகளிலும் தமது தூதரகங்களை மீண்டும் திறக்கும் உடன்படிக்கை ஒன்றை எட்டியுள்ளன என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
வாஷிங்டன் மற்றும் ஹவானாவில் தூதரகங்கள் திறக்கப்படுவது குறித்த முறையான அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையே உறைநிலையில் இருந்த உறவில் நெகிழ்வுத் தன்மை ஏற்படுத்தி அதை புதுப்பிப்பதற்கான எண்ணத்தை கடந்த டிசம்பர் மாதம் இருநாட்டின் அதிபர்களும் வெளிப்படுத்தினர்.
அதற்கு முன்னர் இரகசியமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற பிறகு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
கியூபாவில் புதிய வங்கி நடைமுறைகள் மற்றும் இராஜதந்திரிகளின் சுதந்திரமான நடமாட்டம் ஆகியவை தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் காரணமாக இந்த உடன்பாடு எட்டப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டிருந்தது.
கடந்த மாதம் அமெரிக்க நாடுகளின் உச்சிமாநாட்டில் இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்து பேசிய பிறகு, கியூபாவை பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்கியது.
அந்த மாநாட்டின்போது ஐம்பது ஆண்டுகளில் முதல் முறையாக இருநாட்டு தலைவர்களிடையே அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை தொடங்கியது.
