இந்தியாவுடனான ஒப்பந்தங்களால் சிங்கள மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை!
இந்தியாவுடன் அரசாங்கம் மேற்கொள்ளும் வர்த்தக ஒப்பந்தங்களால் இலங்கையர்கள் முக்கியமாக சிங்கள மக்கள் அச்சமடையத் தேவையில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இந்திய-இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக தேவையற்ற ஒரு அச்சம் நிலவி வருகிறது. தவறாக வழிநடத்தப்பட்ட சில பிக்குகள், வரலாற்றைச் சுட்டிக்காட்டி தேவையற்ற அச்சத்தைப் பரப்புகின்றனர். இன்றைய அரசியல் சூழ்நிலை முற்றிலுமாக மாறிவிட்டது.
பாக்கு நீரிணை ஊடாகப் பாலம் அமைக்கப்பட்டு இரு நாடுகளிடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டால், இலங்கையை சொந்த நாடாக பாவிக்க இந்தியர்கள் தயாராக உள்ளனர். இந்தியா - இலங்கை இடையே ஏற்படும் பொருளாதாரம், தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் தேவையற்ற கருத்துகளைப் பரப்புகின்றனர். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்ற பின்னர் இந்தியப் பிரதமர் மோடி இலங்கைக்கு வந்தார்.
இதேபோல் இந்தியாவுக்கு சென்ற ஜனாதிபதி, பிரதமருக்கு டில்லியில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விரைவில் 3ஆவது முறையாக இலங்கைக்கு வரவுள்ளார். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு எந்த அளவுக்கு சிறப்பாக உள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும் என்றார்
