அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பநிலையின் போது பிரதேச ஊடகவியலாளரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளரான ஏ. எல். எம் ஸியாத் இன்று சனிக்கிழமை நண்பகல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அங்கு தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் மற்றுமோர் இணைய ஊடகவியலாளரான சம்சுல் ஹுதா அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
கிழக்கு மாகாணத்தில் தற்போது தனது கட்சிக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வெள்ளிக்கிழமை இரவு பொத்துவில் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை, ஒரிரு தடவை மின்சாரத் தடையும், இதனையடுத்து ஏற்பட்ட கூச்சல் மற்றும் கூக்குரல்களையடுத்தே அங்கு குழப்பநிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
மின்சாரம் தடைப்பட்டிருந்தபோது, அங்கு ஏற்பட்ட குழப்பநிலையை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தவேளை பொலிஸாரால் தான் கைது செய்யப்பட்டதாக ஊடகவியலாளரான ஏ. எல். எம். ஸியாத் கூறுகின்றார்.
இரவு முழுவதும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையால் தான் பெரு மன உளச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார். கூட்டத்தில் குழப்பம் விளைவித்ததாக போலிஸார் தன்மீது குற்றஞ்சாட்டியதாகவும் அவர் கூறினார்.
தங்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது சம்பவங்களுடன் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச அரசியல்வாதிகளின் பின்புலம் இருப்பதாக குறித்த ஊடகவியலாளர்கள் கருதுகின்றார்கள்.
இதனை கூட்ட ஏற்பாட்டாளர்களில் ஒருவரும் முன்னாள் பொத்துவில் பிரதேச உள்ளுராட்சி சபையின் தலைவருமான எம். எஸ். அப்துல் வாசித் நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக பொலிஸ் தரப்புக் கருத்தை உடனடியாகப் பெற முடியவில்லை.