இலங்கையில் இரண்டு தேசங்களின் கூட்டாட்சியை ஏற்படுத்துவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது தேர்தல் அறிக்கையில் பிரதானமாக முன்வைத்துள்ளது.
புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலம் அப்படியான கூட்டாட்சியை ஏற்படுத்தி, இனப்பிச்சினைக்குத் தீர்வு காண முடியும் என அந்த முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ரேவடி விளையாட்டு மைதானத்தில் ஞாயிறு மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தலைமையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து முக்கியமாகப் பேசப்பட்டிருப்பதாக மணிவண்ணன் குறிப்பிட்டார்.
இரு தேசங்களின் கூட்டாட்சி என்பது ஒரு வகை சமஷ்டி ஆட்சி முறையே என்று கூறிய அவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோருகின்ற அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கின்ற சமஷ்டி ஆட்சி முறையில் இருந்து தாம் கூறும் முறை மாறுபட்டது எனத் தெரிவித்தார்.
மத்திய அரசால் பகிர்ந்தளிக்கப்படுகின்ற அதிகாரங்கள் எந்த நேரத்திலும் திரும்பப் பெறப்படலாம் என்பது ஒரு முக்கியமான விஷயம் என அவர் கூறுகிறார்.
இலங்கை அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைக்கூட, அரசு தீரும்பப் பெற்றுக்கொண்ட நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறினார்.
எனவே 'இரண்டு தேசங்கள்-ஒரு நாடு' என்ற அடிப்படையில் கூட்டாட்சி சமஷ்டி முறையிலான நடைமுறை வந்தால் அதிகாரப் பறிப்புகான வாய்ப்புகள் இருக்காது என்பதே தமது கட்சியின் வாதம் என விஸ்வலிங்கம் மணிவண்ணன் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள அன்றாடப் பிரச்சினைகள், காணி அபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்தும் இந்த தேர்தல் அறிக்கையில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.