படுகொலையுண்ட பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் சடலத்தை மீண்டும் தோண்டியெடுக்கும் நோக்கிலேயே நல்லடக்கம் செய்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தாஜுதீனின் குடும்பத்தினரை மேற்கோள் காட்டி கொழும்பு செய்திச் சேவை ஒன்று விசேடசெய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
வசீம் தாஜுதீனின் சடலம் இஸ்லாமிய வழக்கத்துக்கு மாறாக பொலித்தீனால் சுற்றப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது.
இதன் காரணமாக தற்போதைக்கு அவரது சடலம் மீள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் செயற்பாடு இலகுவாக்கப்பட்டுள்ளது.
தாஜுதீனின் சடலத்தை அவ்வாறு பொலித்தீனில் சுற்றி நல்லடக்கம் செய்யும் நடவடிக்கை அவரது தாய்மாமன் பயாஸ் லத்தீபின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனது சகோதரி மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலமான சந்தேகம் கொண்டிருந்த அவர், வழக்கத்துக்கு மாறான முறையில் வெள்ளை பொலித்தீன் உறையில் சுற்றிய பின்னரே இஸ்லாமியர்களின் வழக்கத்தின்படி சடலத்தை வெள்ளை துணியினால் சுற்றியுள்ளார்.
என்றைக்காவது ஒரு நாள் தனது மருமகனின் மரணம் தொடர்பான மர்மங்கள் விலகி, தமது குடும்பத்தினருக்கு நியாயம் கிட்டும் என்று தாம் உறுதியாக நம்பியதாக தெரிவித்துள்ள அவர், தற்போது அதற்கான காலம் கனிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். .