எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதியின் அனுமதியின்றி முன்னணியின் முக்கியஸ்தர்கள் உட்பட மஹிந்த தரப்பினருக்கு நாடாளுமன்றத்திற்கு நுழைவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நடவடிக்கையின் மூலம் முன்னணி செயலாளர் ஊடாக தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு நுழைய எதிர்பார்க்கும் முக்கிய உறுப்பினர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நபர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குவதோடு ஜனாதிபதியின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிக்காது, முன்னணி பொது செயலாளர் ஊடாக நாடாளுமன்றிற்கு நுழைய ஆயத்தமாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் முன்னணி பொது செயலாளர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக விஷ்வா வர்ணபாலவை ஜனாதிபதி நியமித்தார்.
அது சட்ட விரோதமான செயல் என கூறி தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடொன்று சமர்பிக்கப்பட்டது, அதற்கு இவை கட்சியின் உள் விவகாரங்கள் எனவே அதற்கு தலையிட முடியாதென தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய டிலான் பெரேரா, டிரான் அலஸ், திஸ்ஸ அத்தநாயக்க, சரத் என் டி சில்வா, ஜி.எல் பீரிஸ் ஆகியோர் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கி, சுதந்திர கட்சி தலைவருக்கு எதிராக செயற்பட்டமையினால் தேசிய பட்டியல் ஊடாக அமைச்சர் பதவிகளை வழங்காமல் இருப்பதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.