|
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் புதிய ஆட்சியின் கீழும் இனவாதப் போக்குடன் செயற்படத் தொடங்கியிருப்பதாக கலாநிதி றியாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் செயற்படும் இளைஞர் பாராளுமன்றத்திற்கான தெரிவில் அம்பாறை மாவட்டத்தில் இனவாத அடிப்படையிலான தெரிவு நடைபெறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகால வரையிலும் இளைஞர் பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகள் தேர்தல் தொகுதி அடிப்படையில் நியமிக்கப்படுவது வழக்கம். எனினும் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் மட்டும் அந்த மரபு மீறப்பட்டுள்ளது.
கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய இரண்டு தனித் தனி தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு பிரதிநிதி மாத்திரம் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் இம்முறை இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
முஸ்லிம் பிரதேசத்தில் இருந்து ஒரு பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் அதே வேளை , அம்பாறை சிங்களப் பிரதேசத்துக்கு அப்பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்பு போன்று பிரதேச வாரியாக பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதற்குப் பதிலாக இம்முறை கூடுதல் வாக்கு அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதன் மூலம் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே தெரிவாகும் நடைமுறைக்கு ஒவ்வாத சிக்கலும் தோன்றியுள்ளது.
நல்லாட்சி அரசின் கீழ் இனங்களுக்கிடையிலான நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் முயற்சிகளுக்கு இளைஞர் சேவைகள் மன்றத்தின் செயற்பாடு பாரிய துரோகமாகும் என்றும் கலாநிதி றியாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்கு தனது துணிச்சலான கருத்துக்கள் மூலம் பொது மக்களைத் தட்டியெழுப்புவதில் பாரிய பங்காற்றிய கலாநிதி றியாஸ், தற்போது சமாதானக் கற்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
Tuesday, 27 October 2015
![]() |
இளைஞர் சேவைகள் மன்றத்தில் இனவாதப் போக்கு! கலாநிதி றியாஸ் கடும் கண்டனம் |
Loading...
