அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு!
கடந்த அரசில் அமைச்சுக்களை ஏற்றிருந்த அமைச்சர், பிரதி அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை காலமும் வழங்காத 30 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது. உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஓப்படைக்குமாறு குறித்த அமைச்சர்களுக்கு பல்வேறு சந்தர்பங்களில் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை அதனை அவர்கள் ஒப்படைக்கவில்லை என அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
புதிதாக அமைச்சுக்களை ஏற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தமக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்துள்ளனர். அத்துடன், அமைச்சர்கள் சிலர் இது தொடர்பில் அடிக்கடி எனது அமைச்சுக்கு வந்து வலியுறுத்துகின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 11 மாதங்கள் கழிந்துள்ள நிலையில் கடந்த ஆட்சியில் அமைச்சுக்களைப் பெற்றிருந்த 30 பேர் இன்னும் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்கவில்லை.
நாங்கள் இது தொடர்பில் அவர்களுக்கு பல முறை எழுத்து மூலம் வலியுறுத்தியுள்ளோம். எனினும்,அவர்கள் இன்னும் இதனை மீள ஒப்படைக்கவில்லை.ஆகவே, நாங்கள் இதற்கு சட்ட நடிவடிக்கை எடுத்துத்தான் உத்தியோகபூர்வ இல்லங்களை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அதற்கான தயார்நிலையில் நாங்கள் உள்ளோம் - என்றார்.