Friday, 11 December 2015

மக்களின் கருத்துக்கள் பிரதிபலிக்கும் வகையில் எல்லைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்

மக்களின் கருத்துக்கள் பிரதிபலிக்கும் வகையில் எல்லைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்
மக்களின் கருத்துக்கள் பிரதிபலிக்கும் வகையில் எல்லைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்
தேர்தல் தொகுதி எல்லைகளை அரசியல் கட்சிகளின் வெற்றியை எதிர்பார்த்து நிர்ணயம் செய்யாது, தேர்தலில் பொதுமக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வண்ணம் எல்லைகள் நிர்ணயிக்கப்படல் வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். எல்லை நிர்ணயக் குழுவானது தனது பொறுப்புக்களை நிறைவேற்றும் போது பக்கச் சார்பின்றியும், நியாயமாகவும் தனது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, முன்பிருந்த குழு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் புதிய குழுவின் மீது சுமத்தப்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் தேவையினை சுட்டிக்காட்டினார்.  

குறுகிய கால எல்லையினுள் இந்நடவடிக்கைகளை மேற் கொள்ளும் போது எதிர்பார்க்கப்படும் பணியினை உரியவாறு மேற்கொள்ள முடியாத போது அது பயனளிக்காது எனவும், போதியளவு காலம் ஒதுக்கப்பட்டு இந் நடவடிக்கைகள் சரியான முறையில் உரியவாறு மேற்கொள்ளப்படுவதன் முக்கியத்துவத்தினை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.  

உள்ளூராட்சி நிறுவனங்களின் எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பான சர்வகட்சி மாநாடு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பத்தரமுல்ல தலவத்துகொட கிரேன்ட் மொனார்ச் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 64 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.  

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, எல்லை நிர்ணயம் தொடர்பான அமைச்சரவை உப குழுவின் தலைவர் அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹசீம், அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, எஸ்.பி.திசாநாயக்க, ரவுப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோரும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Loading...