Sunday, 24 January 2016

கிழக்கு அரசாங்க வைத்தியசாலைகளுக்கு 148 வைத்தியர்கள் தேவை

கிழக்கு அரசாங்க வைத்தியசாலைகளுக்கு 148 வைத்தியர்கள் தேவை
கிழக்கு அரசாங்க வைத்தியசாலைகளுக்கு 148 வைத்தியர்கள் தேவை
கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு 148 வைத்தியர்கள் தேவைப்படுகின்றனர் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (சனிக்கிழமை) மாலை நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு 148 வைத்தியர்கள் தேவைப்படுகின்றனர். இந்த ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கும் வைத்தியர்கள் தேவை உள்ளது. அதே போன்று தாதியர் தேவையும் இருக்கின்றது.

கிழக்கு மாகாணம் என்பது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு மாகாணமாகும். தற்போதுதான் ,இந்த மாகாணம் அபிவிருத்தியடைந்து வருகின்ற ஒரு மாகாணமாக இருக்கின்றது.

கடந்த 2015ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்திற்கு 490 மில்லியன் ரூபா மாத்திரம்தான் மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இவ்வாண்டு 990 மில்லியன் ரூபா பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் குறைகளை நிவர்த்தி செய்து தரும் சந்தர்ப்பம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இந்த வைத்தியசாலை மாத்திரமல்ல, மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் சென்று அனைத்து குறைகளையும் கேட்டு நிவர்த்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

மேலும், இந்த வைத்தியசாலை பிரதான வீதியிலுள்ள வைத்தியசாலையாகும். இதையும் விட கிராமப் பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளில் பல் வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. அந்த வைத்தியசாலைகளின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியிருக்கின்றது. இந்த வைத்தியசாலை பிரதான வீதியில் இருப்பதால் வீதிவிபத்துக்களினால் காயப்படுகின்றவர்கள் இங்கு வருவது அதிகமாகவுள்ளது.

எனவே, இந்த வைத்தியசாலையை தரமுயர்த்த வேண்டிய தேவை இருக்கின்றது. குறித்த அபிவிருத்திக்கென ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் சிபாரிசின் அறிக்கை மற்றும் மாகாண அமைச்சரவையுடனும் பேசி அவர்களின் அங்கீகாரத்தினை பெற்று தரமுயர்த்த நடவடிக்கை எடுப்போம்.

அத்தோடு இந்த வைத்தியசாலையின் ஆண்கள் விடுதியை நிர்மானிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், வைத்தியசாலையின் சுற்று மதில் மற்றும் இன்னும் பல தேவைகள் இருக்கின்றன. அவைகளையும் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Loading...