அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு எதிர்வரும் வியாழக்கிழமை மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடவுள்ளது.
விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தமிழ் அரசியல் கைதிகளுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி என்றும் அடிப்படை மனித உரிமை மீறல் எனவும் சுட்டிக்காட்டிய அந்த அமைப்பு சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஜெனீபன் என்ற கைதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது போன்று ஏனைய அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் தேசிய அமைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.
அதேவேளை கைதிகளை விடுதலை செய்வதற்காக அரசாங்கத்தால் அமைப்பட்ட விசேட நீதிமன்றங்கள் வழக்குகளை இழுத்தடிப்பதாகவும் விசேட நீதிமன்றங்கள் மூலம் எந்தவொரு கைதிகளும் விடுதலை செய்யப்படவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
