மக்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கிருப்பேன்!
வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் 18 பில்லியன் டொலர் பணத்தை தேடித்தரும் வரை தான் பார்த்து கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் இன்று காலை பத்தரமுல்லையில் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது கூட்டு எதிக்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை 18 பில்லியன் டொலர் பணத்தை முடியாவிட்டால் ஒரு பில்லியன் பணத்தையாவது தேடித் தருமாறு தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது ஊடக சுதந்திரம் நெருக்கடி நிலைக்கு தள்ளப் பட்டிருப்பதாக தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ நாடாளு மன்றத்திலும் ஊடகவியலாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஜனவரி 08 ஆம் திகதியின் பின்னர் கட்சியின் தலைமைத்துவத்தையும் விட்டுக் கொடுத்ததாக தெரிவித்த அவர், மக்கள் தொடர்ச்சியாக தன்னைத் தேடி வருவதாகவும் "மக்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு மகிந்த" எனவும் தெரிவித்துள்ளார்.
