Monday, 29 February 2016

ஐரோப்பிய யூனியனைவிட்டு வெளியேறுமாபிரிட்டன்?

"என்றென்றும் இணைந்திருப்போம்' என்ற கோஷத்துடன் 1993-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது ஐரோப்பிய யூனியன்.

இரண்டாம் உலகப் போரின்போது எலியும், பூனையுமாக இருந்த ஐரோப்பிய நாbrit-euடுகளை ஒருங்கிணைத்து, அசுர பலம் வாய்ந்த ஒரே தேசமாக உருமாற்றும் கனவுடன் ஆரம்பிக்கப்பட்டது அந்த அமைப்பு.

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பதன் அடிப்படையில் உருவான அந்த அமைப்பின் நிலை, இன்று சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை.

ஒரே நாணயம், மாநில எல்லைகளைப் போன்ற தேச எல்லைகள் என்று உலகின் மற்ற பிராந்தியங்களைப் பொறாமை கொள்ளச் செய்யும் வகையில் ஒற்றுமை காத்த ஐரோப்பிய யூனியனில் கடந்த சில ஆண்டுகளாக சச்சரவுகள் அதிகரித்து வருகின்றன.

28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அந்த அமைப்பின் எதிர்காலமே தற்போது கேள்விக் குறியாகியிருக்கிறது.

இதன் அடையாளமாக, ஐரோப்பிய யூனியனில் தொடரலாமா, அல்லது அதிலிருந்து விலகிவிடலாமா என்று ஐரோப்பாவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நாடான பிரிட்டனில் விவாதம் எழுந்துள்ளது.

இந்தக் கேள்விக்கு, வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் பொதுவாக்கெடுப்பில் பதில் சொல்லப் போகிறார்கள் பிரிட்டன் மக்கள்.

ஐரோப்பாவை மட்டுமின்றி, உலகின் பிற நாடுகளும் இதற்கான பதிலை ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கின்றன.

ஐரோப்பிய யூனியன் ஆரம்பித்தது முதல் அதனை எதிர்த்து வரும் பிரிட்டன் தேசியவாதிகள், விலகுவதற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி பிரசாரத்தை தொடங்கிவிட்டனர்.

இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளை அடிமைப்படுத்தியிருந்த பிரிட்டனையே, பொதுவாக்கெடுப்பு மூலம் ஐரோப்பிய யூனியனின் "அடிமைத் தளை'யிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

அவர்களது வாதத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை.

வெவ்வேறு சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பாக இருந்தாலும், அந்த நாடுகள் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அளவுக்கு அதிகமாகப் பிணைக்கப்பட்டிருப்பது உறுப்பு நாடுகளின் இறையாண்மைக்குப் பாதகமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடான கிரீஸ், பொருளாதார நெருக்கடியால் கடந்த ஆண்டு சந்தித்த பெரும் பிரச்னை இதற்கு ஒரு உதாரணம்.

பொருளாதாரச் சரிவைச் சந்தித்து வரும் அந்த நாட்டுக்கு, தனியான நாணயம் இருந்திருந்தால் அந்த நாணயத்தின் மதிப்பைக் கட்டுப்படுத்தி, அன்னியக் கடன் மதிப்பு, உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் விலை ஆகியவற்றைக் கட்டுக்குள் வைத்திருந்திருக்கலாம்.

ஆனால் ஒரே நாணயத்தைக் கொண்ட ஐரோப்பிய யூனியனின் உறுப்பினராக இருப்பதால், சுயமாக பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குப் பதில், யூனியனின் நிபந்தனைகளை ஏற்று, அந்த அமைப்பிடமிருந்து உதவி பெற வேண்டிய நிலைக்கு கிரீஸ் தள்ளப்பட்டது.

அப்படி இருந்தும், அந்த நாட்டுக்கு நிதியுதவி அளிக்க உறுப்பு நாடுகள் கெடுபிடி செய்தன.

இந்த விவகாரத்தில் ஐரோப்பிய யூனியனிடம் தனது இறையாண்மையை அடகு வைத்துதான் கிரீஸால் உதவி பெற முடிந்தது.

இந்தியாவைப் போல ஐரோப்பிய யூனியனும் பல மாநிலங்கள் அமைந்த ஒரு நாடாக இருந்தால், நலிந்த மாநிலங்களை மத்திய அரசின் நிதி கொண்டு காப்பாற்றுவது போல கிரீள்ஸக் காப்பாற்றியிருக்க முடியும்.

ஆனால், ஒரு நாட்டின் மாநிலம் போலவும் இல்லாமல், முழு இறையாண்மை கொண்ட ஒரு நாடாகவும் இல்லாமல் ஒரு வினோத நிலை.

கிரீஸின் இந்த நிலை பிரிட்டனுக்கு ஏற்படாது என்றாலும், இந்த விவகாரம் பிரிட்டன் மக்களிடையே ஐரோப்பிய யூனியனைக் குறித்த எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அது தவிர, போரால் பாதிக்கப்பட்ட சிரியா, இராக் போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பா நோக்கி வரும் லட்சக் கணக்கான அகதிகளை சுமக்க உறுப்பு நாடுகளை யூனியன் நிர்பந்திப்பதும், அந்த அமைப்பிலிருந்து வெளியேறும் எண்ணத்தை பிரிட்டன் மக்களுக்கு உருவாக்கும் என்று கருதப்படுகிறது.

ஆனால், இவற்றை வைத்து பிரிட்டன் ஐரோப்பிய யூனியனைவிட்டுப் பிரிந்து விடும் என்று ஒரேடியாகக் கூறிவிட முடியாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

காரணம், ஐரோப்பிய யூனியனுடன் இணைந்திருப்பதற்கு பிரிட்டனின் செல்வாக்கு மிக்க ஒரு பிரிவினர் தற்போதும் ஆதரவு தெரிவித்து வருவதுதான்.

ஐரோப்பிய யூனியனுடன் பேரம் பேசி, பிரிட்டனுக்கு கடந்த வாரம் பல சலுகைகளைப் பெற்றுத் தந்த பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட பலர் யூனியனில் இணைந்திருப்பதற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.

பிரிட்டனின் தொழிற்துறைக்கும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிய மனமில்லை.

அவ்வாறு பிரிந்தால், இப்போது போல் ஸ்பெயின் முதல் போலந்து வரை பரந்து விரிந்த ஐரோப்பியச் சந்தையை அவர்கள் இழக்க நேரிடும்.

லண்டனின் மட்டும் தலைமையகத்தை வைத்து செயல்படுவதற்குப் பதில் ஒவ்வொரு நாடுகளிடமும் ஒப்பந்தம் மேற்கொண்டு, அந்தந்த நாடுகளில் தனி தலைமையகங்கள் அமைத்து அவர்கள் செயல்பட வேண்டியிருக்கும்.

ஐரோப்பிய யூனியனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பிரிட்டனின் பங்கு வெறும் 0.4 சதவீதமாக உள்ள நிலையில், பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐரோப்பிய யூனியனின் பங்கு 4 முதல் 5 சதவீதமாக இருப்பதை தொழிற்துறையினர் சுட்டிக் காட்டுகின்றனர்.

இப்படி பிரிட்டனில் ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறுவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சரி சமமாகக் குரல்கள் ஒலித்தாலும், ஜூன் மாதம் நடைபெறவுள்ள பொதுவாக்கெடுப்பில் யூனியனில் தொடர்வதற்கே பெரும்பாலான மக்கள் வாக்களிப்பார்கள் என்று தற்போதைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பொது வாக்கெடுப்பின் முடிவு எப்படி இருந்தாலும் சரி, "என்றென்றும் இணைந்திருப்போம்' என்ற கோஷத்துடன் தொடங்கிய ஐரோப்பிய யூனியன் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளாவிட்டால், அதன் இருப்புக்கே மோசம் வந்துவிடும் என்பதை பிரிட்டன் மக்கள் இப்போதே சொல்லாமல் சொல்லி விட்டார்கள்.
Loading...