Tuesday, 8 March 2016

புதிய அரசமைப்பு விடயத்தில் விழிப்பாக இருக்கிறது மு.கா.!

புதிய அரசமைப்பு விடயத்தில் விழிப்பாக இருக்கிறது மு.கா.!
 புதிய அரசமைப்பு விடயத்தில் விழிப்பாக இருக்கிறது மு.கா.!
நாட்டில் தற்போது பேசுபொருளாகவுள்ள புதிய அரசமைப்பு சீர்திருத்தம் தொடர்பான விடயத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகக்காத்திரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. சிலரால் கூறப்படுவது போன்று முஸ்லிம் காங்கிரஸ் மௌனம் காக்கவில்லை. இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர் விநியோக வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

கல்முனை மாநகரசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழுவின் தலைவருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸின் தலைமையில் இடைக்கால மத்திய குழுவின் விசேட கூட்டம் சாய்ந்தமருது ஹெல்த் சென்டரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார். 

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஷபீக் ரஜாப்தீன் மற்றும் கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் உள்ளிட பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ரவூப் ஹக்கீம், புதிய அரசமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பல்வேறு உயர்மட்டக்குழுக்களுடன் மு.கா. கலந்துரையாடி வருகின்றது. 

இதில் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப்பின் யோசனைகளை உள்ளடக்கியவாறு ஆவணங்களும் தயார்படுத்தப்படுகின்றன என்று கூறினார். எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், பாலமுனையில் மிக விமர்சையாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும், முஸ்லிம் காங்கிரஸின் அபிமானிகள் அனைவரும் அணியணியாக வந்து இதில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பாக அவர் கூறும்போது, இப் பிராந்திய மக்களுக்கு வாக்களித்தவாறு கல்முனை அபிவிருத்தி செய்யப்படும் என்றும்,அதற்க்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், கல்முனை நகர அபிவிருத்தியின் ஆரம்பகட்ட பணிகள் சாய்ந்தமருதில் இருந்தே ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். குறித்த கல்முனை நகர அபிவிருத்தி பணிகளை செயட்படுத்துவதற்காக கல்முனையில் விரைவில் அலுவலகம் ஒன்றை திறக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 
Loading...