Tuesday, 8 March 2016

இருண்ட தினம் பிரகடனம்!

இருண்ட தினம் பிரகடனம்!
இருண்ட தினம் பிரகடனம்!
மகளிர் தினமாகிய இன்றைய தினத்தையும், இந்த மாதத்தினையும் நாம் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இருண்ட நாட்களாக பிரகடனப்படுத்துகின்றோம் என வலியுறுத்தி யாழ்.பரமேஸ்வரா சந்தியில் வடமாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும், கொலைகளும், சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும், கொலைகளும் மிகவும் மோசமான முறையில் நாடளாவிய ரீதியில் அதிகரித்து வருவதாலும், இந்த வன்முறைகளுக்கான நீதி இதுவரை கிடைக்காததாலும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்றுப்போனதாலும் பெண்களுக்கான தினமாகிய இன்றைய தினம் மற்றும் இந்த முழு மாதத்தினையும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இருண்ட நாட்களாகப் பிரகடனப்படுத்துகின்றோம்.

நாம் ஒருபோதும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் எமது சமூகத்தில் நிகழ விட மாட்டோம், பெண்களுக்கெதிரான வன்முறையாளர்களாக நாங்கள் இருக்க மாட்டோம், பெண்களுக்கெதிரான வன்முறையாளராக எமது ஆண்கள் மாற விட மாட்டோம். பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிரான நீதி கிடைக்கும் வரை நாம் ஓய மாட்டோம். போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதேவேளை இன்றைய தினத்தை இருண்ட நாளாக எடுத்தக்காட்ட எமது வீடுகளிலும், கடைகளிலும், அலுவலகங்களிலும் கறுப்புக் கொடிகளை ஏற்றுவோம், கறுப்பு உடைகள், கறுப்புப் பட்டிகளை அணிவோம் எனவும் இந்த அமைப்பு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

                           

                           

                           

                            

                            

                                                        

Loading...