விடுவிக்கப்பட்ட காணிகளில் விரைவாக மீள்குடியேறுங்கள்.-மக்களுக்கு அரச அதிபர் அறிவுறுத்து
மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்கள் விரைவாக சென்று மீள குடியமருங்கள்.உங்களுக்கு தேவையான உரிய அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். என யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்றைய தினம் நடைபெற்ற காணி கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
ஏற்கனவே மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் மீள குடியமர வில்லை எனும் குற்ற சாட்டு இராணுவத்தினரால் முன் வைக்கபடுகின்றது. எனவே மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட இடங்களில் விரைவில் மீள் குடியேறுங்கள்.
இங்கிருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களில் இயங்கும் திணைக்களங்களும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மீள இயங்க வேண்டும். பல திணைக்களங்கள் சொந்த இடங்களில் மீள இயங்க பின்னடிக்கின்றது. அவ்வாறு இல்லாமல் திணைக்களங்கள் சொந்த இடங்களில் மீள இயங்க ஆரம்பித்தல் வேண்டும்.
திணைக்களங்கள் இங்கே இயங்க ஆரம்பித்தால் தான் மீள் குடியேறும் மக்களின் தேவைகளை உடனுக்கு உடன் நிவர்த்தி செய்ய முடியும்.
வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்த்த மக்களில் காணி இல்லாதவர்களுக்கு காணிகள் வழங்கப்படும்.
நலன்புரி நிலையங்களில் வாழும் 600க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காணி இல்லாத நிலை காணப்படுகின்றது. அவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். விரைவில் காணி அற்றவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு முகாம்களில் வாழும் மக்கள் அங்கு மீள குடியமர்த்தப் படுவார்கள்.
முகாம்களில் இல்லாமல் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் இருக்கின்றவர்களுக்கும் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றார்கள் அவர்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம். என தெரிவித்தார்.
