மயூரன் சுகுமாரனும், அன்ட்ரூ சானும் கௌரவத்துடன் மரணத்தை எதிர்கொள்வதற்கு திடசங்கற்பம் பூண்டிருந்ததாக கிறிஸ்தவ பாதிரியார் தெரிவித்துள்ளார்.
Charlieஇந்த அவுஸ்திரேலியப் பிரஜைகள் துப்பாக்கி வேட்டுக்களை நெஞ்சில் தாங்கி மரணத்தைத் தழுவும் ஸ்தலத்திற்கு செல்ல முன்னர் இருவரையும் சந்தித்த வணக்கத்திற்குரிய பிதா சார்ளி பரோவ்ஸ், இருவரது மனோநிலை பற்றி பேட்டியளித்தார்.
மயூரனும், சானும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் கைகுலுக்கி விட்டு கொலைக்களத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர், தாம் இருவருடனும் சிறிது நேரம் பேசியதாக கிறிஸ்தவ பாதிரியார் தெரிவித்தார். இந்த சமயத்தில் இருவரும் புனர்வாழ்வு பெற்ற விதத்தை தாம் நினைவு கூர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
'அவர்களது மாற்றம் பற்றி நான் பாராட்டிப் பேசினேன். எனது பணிகளை இருவரும் பாராட்டினார்கள். அவை தான் இருவரும் பேசிய கடைசி வாhத்தைகள்,' என்றார், வணக்கத்திற்குரிய பிதா சார்ளி பரோவ்ஸ் அடிகளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட சகலரும் தடிகளில் பிணைக்கப்பட்டார்கள். துப்பாக்கியால் சுடப்படும் வேளையில், ஒருவரும் அசையாதிருப்பதை உறுதி செய்வது அதன் நோக்கமாக இருந்தது என்றார், அந்தப் பாதிரியார்.
'அவர்கள் அனைவரும் உறுதியாக இருந்தார்கள். பக்திப் பாடல்களைப் பாடினார்கள். ஒருவரும் கண்ணைக் கட்டிக் கொள்ளவில்லை. மரணத்தை சந்திக்கும் தருணத்தில் உறுதியாக இருந்தால், தமது பெற்றோரின் கவலை குறையும் என்பது நோக்கமாக இருந்தது. தமது மகன் மரணிக்கும் தருணத்தில் அழுதார் என்பதைக் கேள்விப்பட்டால், பெற்றோர் தாங்கிக் கொள்ள மாட்டார்கள் அல்லவா? அவர்கள் கதறவில்லை. அமைதியான முறையில் மடிந்தர்கள்,' என்று அவர் கூறினார்.
நன்றி : கனடா மிர்ரர்