பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது.
முன்னாள் எம்பியும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான அலிசாகிர் மௌலான தலைமையில் முகா களமிறங்கவுள்ளது.
தனி வழி செல்லும் முகாவுடன் இணைந்து காத்தான்குடியைச் சேர்ந்த றகுமான் தலைமையிலான நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியும் போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது.
அதே நேரம் தங்கள் அணி முகாவுடன் இணைந்து போட்டியிடும் பட்சத்தில் எமக்கு தேசியப்பட்டியலை எழுத்து மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முகா செல்வாக்கை இழந்துள்ளதாகவும் இத்தேர்தலில் முகா ஒரு ஆசனத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் எமது ஆதரவு முக்கியம் என்ற காரணத்தை அடிப்படையாக வைத்தே இத் தேசியப்பட்டியல் கோரிக்கையை றகுமான் அணி ஒரு நிபந்தனையாக முன்வைத்துள்ளதாக நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி தரப்பு தகவல்களிலிருந்து தெரியவருகின்றது.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் றகுமான் அணியுடன் முகா தணிவழிப்பயணம் பெரும் இழுபறி நிலையை தோற்றுவித்துள்ளதாகவும் அறிய வருகின்றது.
எனினும் றகுமான் அணியின் தரப்பினரின் காரணத்தை மறுதலித்துள்ள முகா தரப்பு இவர்கள் இல்லாமல் போட்டியிட்டு மட்டக்களப்பில் எம்மால் வெற்றி பெறமுடிமென மட்டு முகா பிரமுகர்கள் பதில் வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அதே நேரம் றகுமான அணியினர்க்கு தேசியப்பட்டியல் வழங்கப்படுதல் என்ற பேச்சு அலிசாகிர் மௌலானா ஆதரவாளர்களை பெரும் அச்ச சூழ்நிலைக்கு உள்ளாக்கியுள்ளதாக மட்டக்களப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி துரிதமாக இடம்பெற்றுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.