முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தியதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தன்னை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போதே திலங்க சுமதிபால இதனை கூறியுள்ளார்.
“சேர் நீங்களே சகல அழிவுக்கும் பொறுப்புக் கூற வேண்டும். மைத்திரிபாலவை நீங்களே கட்சியின் தலைவராக்கினீர்கள்.
குடும்பத்தை பாதுகாப்பதற்காக சேர் கட்சியை கட்டிக்கொடுத்து விட்டீர்கள். மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைவர் பதவியை கோரவில்லை. உங்கள் குடும்பத்தின் திருட்டுக்களை மூடிமறைக்க நீங்களே கட்சியை அவரிடம் பலவந்தமாக வழங்கினீர்கள்.
அப்படி வழங்கியிருக்காவிட்டால் ஜனாதிபதி கட்சியின் தலைவராக இருந்திருக்க மாட்டார். கட்சியும் இவ்வாறு இரண்டாக பிளவுப்பட்டிருக்காது” இவ்வாறு திலங்க சுமதிபால, முன்னாள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
திலங்க சுமதிபாலவுக்கு நேற்று தொலைபேசி அழைப்பை எடுத்து பேசிய மகிந்த, தொடர்ந்தும் மைத்திரி ஆதரவு அணியில் இருக்காது தமது அணியுடன் கைகோர்க்குமாறும் இல்லாவிட்டால் தேர்தலில் திலங்க நிச்சயம் தோல்வியடைய நேரும் என மகிந்த தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள திலங்க சுமதிபால, தோற்றால் பரவாயில்லை. நான் எப்போதும் கட்சியின் தலைவர் பக்கமே இருப்பேன். சேர் கட்சியின் தலைவராக இருந்த போது 100 வீதம் உங்களுடன் இருந்தேன். மற்றவர்களை போல் அங்கொரு காலும் இங்கொரு காலும் வைத்து கொண்டு இருக்கவில்லை.
ஷிராணியை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலக்கியது தவறு என்ற போதும் நாங்கள் உங்களுக்காக குரல் கொடுத்தோம். நீங்கள் சொல்வதை கேட்டே ஷிராணியின் வீட்டுக்கு எதிரில் உண்ணாவிரதம் இருந்து அவரை விரட்டி விட்டு பாற்சோறு சாப்பிட்டோம்.
நீங்கள் எங்களுக்கு உதவி செய்து இருக்கிறீர்கள். எமது கோப்புகள் உங்களிடம் இருப்பதாக கூறி பயமுறுத்தி அனைத்தையும் செய்து கொண்டீர்கள். மீண்டும் எங்களுக்கு அப்படி பயந்து வாழ வேண்டிய தேவையில்லை.
உங்களை போல் நாங்கள் அரசியலில் சம்பாதிக்கவில்லை. கையில் இருந்ததையே நாங்கள் செலவிட்டுள்ளோம். இதனால், நாங்கள் தோல்விக்கு அஞ்சவில்லை. ஜனாதிபதி எங்களை தற்காத்து கொள்வார்” என திலங்க சுமதிபால, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பதிலளித்துள்ளார்.