Sunday, 25 October 2015

இளவரசி டயானா

உலகின் அத்தனை இதயங்களையும் ஒரு சேர கவர்வதற்கு அதிஷ்டம் மட்டுமல்லாமல் சில அடிப்படை தகுதிகளும் இருக்க வேண்டும். இங்கிலாந்தின் இளவரசி டயானாவுக்கு அந்தத்தகுதி நிறையவே இருந்தது. அதிலும் மறைந்து  15 வருடங்கள் முடிந்த நிலையிலும், இன்னும் பலர் அந்த மரணத்தை மறக்கவோ, நம்பவோ முடியாமல் ‘பெண்ணே.. எழுந்து வரமாட்டாயா?’, என்று கண்ணீர் விட்டும் பூங்கொத்துகளோடு உலகம் முழுக்க அவர் நினைவுநாளில் உருக்கமாகக்கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். டயானா என்ற நடுத்தரக் குடும்பத்தைச்சேர்ந்த, மென்மை சுபாவம் கொண்ட, அந்த அழகான இளம் பெண் மக்களுக்கு அறிமுகமானதே ஒரு சுவாரஸ்யமான கதை.

லண்டனில் இருந்த ஒரு நர்சரி பள்ளிக்கூடம் அது. பள்ளியின் வெளியே இருந்து வந்த இரைச்சலான குரல்கள் கேட்டு அந்தப்பள்ளியின் பிரின்சிபால் திகைத்துப்போய் வெளியே வந்தார். வெளியே, பள்ளியை ஃபோகஸ் பண்ணிய படி கேமராக்கள். ரிப்போர்ட்டர்கள், டி.வி. மைக்குகள் என்று சுற்றிலும் ஜே ஜேவென பெரும் இரைச்சல்! ‘‘என்ன வேண்டும் உங்களுக்கு?’’ கேட்டார் அந்த பிரின்ஸிபால்.‘‘உங்கள் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும் இளம் பெண்ணான டயானாவைப்பார்க்க வந்திருக்கிறோம். அவரை தயவு செய்து வெளியே வரச்சொல்லுங்கள் என்று ’’ கோரஸாக குரல் வந்தது.
diana11
பிரின்ஸிபால் திகைப்புடனே நின்றார். ‘‘இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசியாக டயானா ஆகவிருக்கிறார் என்ற விசயம் உங்களுக்குத்தெரியுமா, தெரியாதா? இந்த இளம் பெண் டயானாவும், இளவரசர் சார்லஸும் காதலிக்கிறார்கள். டயானா எப்படியிருப்பார்? அவர் முகத்தை நாங்களும் பார்க்க வேண்டும். படமெடுக்க வேண்டும். அவரை வெளியே வரச்சொல்லுங்கள்!’’என்று கூட்டம் திமிற ஒரு சிறிய குழந்தையைக்கையில் தூக்கி வைத்த படி உள்ளே, கதவருகே, நின்று கேட்டுக்கொண்டிருந்த டயானா ‘மிஸ்’ தயக்கத்துடன் வெளியே வந்தாள்.
தயக்கமான பந்தா இல்லாத பார்வை, மிக எளிமையான ஒரு மெல்லிய ஸ்கர்ட் என்று பக்கத்து வீட்டுப்பெண் போன்ற தோற்றத்தில் டயானா வர அவ்வளவு தான் அத்தனை காமெராக்களும் தங்கள் ஆசை தீர டயானாவின் உருவத்தை விழுங்கிக்கொண்டன. அவளைப்பெருமிதத்துடன் ‘‘இவள்தான் எங்கள் இளவரசி!’’ என்று உலகம் முழுக்க அறிமுகப்படுத்தின. அன்று தொடங்கிய காமெராக்கள் தான் அப்புறம் டயானாவின் வாழ்க்கையில் அவரைத் துரத்தித்துரத்தி படமெடுக்கத்தொடங்கின.
டயானா சார்லஸ் காதல் ஆரம்பமானது ஒரு விழாவில்தான்!
எலிஸபெத் மகாராணியின் செகரட்டரியைத்தான் டயானாவின் இரண்டாவது அக்கா ஜேன் திருமணம் செய்து கொண்டிருந்தார். அக்காவைப் பார்க்கச்செல்லும் டயானா அவ்வப்போது அரண்மனை விழாக்களிலும் பங்கு கொள்வதுண்டு. தவிர டயனாவின் அப்பா அல்டாஃப், இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் குதிரை பராமரிப்பு வீரராக இருந்ததால் அரச குடும்பத்துடன் நெருங்கிப்பழகுவார். எப்போதும் புன்னகைத்துக்கொண்டே இருக்கும் இந்த இனிமையான இளம்பெண்ணை, இளவரசர் சார்லஸ் பார்த்தது அப்படி ஒரு விழாவில் தான். தனது திருமணத்தை ரொம்ப நாட்களாகத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்த சார்லஸை முதல் பார்வையிலேயே கவர்ந்து விட்டாள் டயானா. இருவரும் நெருங்கிப் பழகத்தொடங்கினார்கள்.
Wedding_of_Charles_Prince_of_Wales_and_Lady_Diana_Spencer_photo
ஒன்று மாற்றி மற்றொன்று என இளம் பெண்கள், பல ஆண்களோடு டேட்டிங் போவது வெளிநாட்டில் சகஜமாக இருந்தாலும், டயானா அந்த மாதிரி எந்த ஆணுடனும் பழகியதில்லை. அவள் வாழ்க்கையில் முதன்முதலாக டேட்டிங் செய்ததே சார்லஸோடுதான்.
டயானாவின் அழகு, நடத்தை, மகன் சார்லஸின் பிடிவாதம் என்று பல காரணங்களுக்காக மகாராணி எலிஸபெத்தும் இந்தத்திருமணத்துக்கு ஒத்துக்கொண்டார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் நடந்த முதல் காதல் திருமணமே சார்லஸ்,டயானாவுடையது தான். டயானா படம் பத்திரிக்கைகளில் வந்தவுடனேயே, இங்கிலாந்தில் ‘டயானா ஜுரம்’ என வெகுவேகமாகப் பரவத்தொடங்கியது. ‘டயானாவைப்போலவே இருக்கும் பெண் யார்?’ எனும் தலைப்பில் ஒரு பிரபல பத்திரிகை போட்டியே நடத்தியது. அந்த அளவுக்குத்திருமணத்திற்கு முன்னரே படு பாப்புலராகி விட்டார் டயானா. அவர் நிற்பது, சிரிப்பது என எல்லாமே பரபரப்புச்செய்தியானது. தேவதைக்கதைகளில் வருவது போல் டயானா சார்லஸ் திருமணம் உலகமே வியக்கும் படியாக, மிகப்பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்தை நேரடியாக ஒளிபரப்பியது பி.பி.சி தொலைக்காட்சி. உலகமே அதை ஆவலுடன் ரசித்துப்பார்த்தது.
அரச குடும்பத்தின் மருமகளாகி விட்ட நிலையில் தன் கடமைகளைச்செய்வதில் மிகக்கவனமாக இருந்தார் டயானா. அரச குடும்பத்தினர் பொதுவாக வெளியுலகத்தினருடன் அதிகம் பட்டுக்கொள்ளாமல், ஏதாவது சில முக்கிய விழாக்களுக்கு மட்டும் செல்வதுண்டு. ஆனால் டயானா, தன் இயல்பான இரக்க சுபாவத்தால், நர்சரிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு அதிகமாகச் செல்லத்தொடங்கினார்.
ஒரு வட்டத்திற்குள் தன்னைச்சுருக்கி கொள்ளாமல், எளிமையாக அவர் எல்லோருடனும் சகஜமாகப் பழக, அவரது இமேஜ் கிடுகிடுவென ஏறத்தொடங்கியது. சார்லஸ் கூட ஒரு முறை ‘‘இப்போதெல்லாம் டயானாவுக்குக்கொடுக்கப்படும் பூங்கொத்துக்களைக்கலெக்ட் செய்வதே எனக்குப்பெரிய வேலையாகிவிட்டது!’’ என்று விளையாட்டாகக் குறிப்பிட்டார். மாமியார் ராணி எலிஸபெத்துக்கு டயானாவின் மேல் தனிப்பாசம். டயானாவும் மாமியாரிடம் பிரியமாகப்பழகுவார். பிற்காலத்தில் மனசுக்கு சங்கடமான சில நேரங்களில், மாமியாருடன் சென்று பேசிக்கொண்டு இருந்தது தான் டயானாவின் மனசுக்கு நிம்மதியளித்திருக்கிறது.
d0729b5692e85506e77ac0c02423f1c6
அரச குடும்பத்தினரின் வாழ்க்கை முறை அவ்வளவாக சாதாரணமாக மக்களுக்குத்தெரியாது. அவர்களுடைய புகைப்படங்கள் கூட எப்போதாவது தான் பத்திரிகைகளில் வரும். ஆனால் டயானா, வேல்ஸ் இளவரசியானதும் நிலைமை தலைகீழானது. அவர் தினசரி செய்யும் அனைத்து காரியங்களும் வரிசை மாறாமல் பேப்பரில் வர ஆரம்பிக்க, அரண்மனைக்குள் மெல்ல சூடு கிளம்ப ஆரம்பித்தது. மகாராணியே வேறு வழியில்லாமல் அனைத்து பத்திரிக்கைகளின் எடிட்டர்களையும் அரண்மனைக்கு வரவழைத்து, இனி டயானாவை போகுமிடமெல்லாம் படமெடுத்து தொந்திரவு செய்ய வேண்டாம் என்றுகேட்டுக்கொண்டார். எல்லாம் ஒரு சில நாட்கள் தான். மறுபடி பழைய கதைதான்.
திருமணம் ஆன மறு வருடத்திலேயே முதல் மகன் வில்லியம் பிறந்தான். இரண்டு வருடங்கள் கழித்து அடுத்த குழந்தை ஹென்றி. இங்கிலாந்து அரச குடும்பத்தைச்சேர்ந்த யாரும் பள்ளிக்குச்சென்று படித்ததில்லை. ஆசிரியர்கள் தான் அரண்மனைக்கு வந்து பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். ஆனால், தன் மகன்கள் விசயத்தில் இது தொடர டயானா விரும்பவில்லை. அவர்கள் பள்ளிக்குச்சென்று தான் படிக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அப்போதுதான் மக்களோடு மக்களாகப்பழகும் வாய்ப்பு தன் குழந்தைகளுக்குக்கிடைக்கும் என்று டயானா நம்பினார்.
கணவரின் மேல் டயானா, அளவுக்கு அதிகமான காதல் கொண்டிருந்ததாலேயோ என்னவோ கமீலா என்ற திருமணமான பெண்ணுடன் சார்லஸுக்கு முன்பிருந்தே ஒரு உறவு இருந்து வருகிறது. அது இப்போதும் தொடர்கிறது என்று தெரிந்த போது, அவரால் அதைத்தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. திருமணமான முதல் வருடத்திலேயே இதனால் இருவருக்கும் பிரியம் குறைந்தது. மனம் வெறுத்து டயானா சிலமுறை தற்கொலை முயற்சியில் கூட ஈடுபட்டிருக்கிறார். எதை சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்து விடுகிற  நோய் கூட அவருக்கு வந்துவிட்டது.
a9ce2b9b6eb09a6a68725e49fc6cfc78
தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளை மறக்க, பல சமூக நலத்திட்டங்களில் இன்னும் அதிகமாக ஈடுபட ஆரம்பித்திருந்தார் டயானா. அப்படித்தான் ஒரு முறை, எய்ட்ஸ் நோயாளி ஒருவருடன் டயானா கைகுலுக்கிய புகைப்படம் பிரிட்டிஷ் நாளிதழ்களில் முதல் பக்கத்தைப்பிடித்தது. எய்ட்ஸ் என்பது தொட்டாலே ஒட்டிக்கொள்ளும் வியாதி என்று பலரால் கருதப்பட்ட அந்தக்காலகட்டத்தில், இளவரசியே இப்படி நடந்து கொண்டது, எய்ட்ஸ் குறித்த பல தவறான பயங்கள் நீங்க வழி வகுத்தது. இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த தொழுநோயாளிகளிடம் டயானா கைகுலுக்கியதும் பலரையும் வியக்க வைத்தது. குழந்தை ஹாரி, நர்சரி பள்ளியில் சேர்க்கப்பட்ட காலகட்டத்தில் சார்லஸ் டயானா விரிசல் பகிரங்கமானது. தன்மேல் தவறில்லை என்பது போல் சார்லஸ் பி.பி.சி.யில் பேட்டி கூட அளித்தார். இதை தொடர்ந்து  ‘‘அரசராகும் எண்ணம் சார்லஸுக்கு இல்லை’’ என்று, டயானா தன் பேட்டியில் பல விசயங்களை பகிரங்கப்படுத்த அது, இங்கிலாந்து மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூடவே ‘‘நான் ராணியாக விரும்புகிறேன்; ஆனால் சிம்மாசனத்தில் அமரும் ராணி அல்ல; மக்கள் மனங்களில் என்றென்றும் ராணியாக இருக்கவே விரும்புகிறேன்..’’ என்று டயானா கூறியது மக்கள் மனதில் பசை போட்டு ஒட்டிக்கொண்டது.
காரணம் உதட்டிலிருந்து வராமல் அவரது உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள் இவை என்பது அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்திருந்தது. இருவரின் தொலைக்காட்சிப்பேட்டிகளும் ஒலிபரப்பான உடனே ‘மக்கள் யார் பக்கம்?’ என்று வேறொரு தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் ‘‘தொலைக்காட்சி பேட்டிக்குப்பிறகு நாங்கள் டயானாவை மேலும் விரும்புகிறோம்!’’ என்று எண்பத்து மூன்று சதவிகிதத்தினர் பதிலளித்து அசத்தினர்.
diana (2)
மக்கள் ஆதரவு டயானாவுக்கு தான் என்பதை அறிந்தவுடன், பக்கிங்காஹாம் அரண்மனையும் டயானாவுக்கு வெளிப்படையான எதிர்ப்பு காட்டாமல் அடக்கி வாசித்தது. கமீலாவுடன் தனக்கிருந்த தொடர்பை பிறகு வெளிப்படையாக ஒத்துக்கொண்டார் சார்லஸ். டயானாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடக்காமலில்லை. டயானாவின் குதிரைப்பயிற்சியாளரான ஜேம்ஸ் ஹெரிட் ஒரு நூலை வெளியிட்டார். அதில் டயானாவுடன் தான் நெருக்கமாக இருந்தது உண்டு என்று குறிப்பிட்டார். டயானா இதை மறுக்கவில்லை. ஆனால் ‘‘அவர் எனது மிக அரிய நண்பராக விளங்கியவர். அதுவும் சோதனையான ஒரு கட்டத்தில் அவரது அந்த நூல் வெளியாவதற்கு பத்து நாட்கள் முன்பு என்னைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டார் அவர். ‘என் புத்தகத்தில் நீங்கள் கவலைப்படும் படியாக நான் எதையும் எழுதவில்லை’ என்றார். நானும் முட்டாள் தனமாக அதை நம்பினேன்…’’ என்று உடைந்துபோய்ச்சொன்னார் டயானா. சார்லஸ் டயானா விரிசல் இவ்வளவு பகிரங்கமான பிறகு விவகாரத்து தான் ஒரே வழி என்று மகாராணியே வற்புறுத்த, விவாகரத்து நடந்தது. டயானா இந்தியாவுக்கு கூட வந்திருக்கிறார். உடல்நலம் குறைந்திருந்த அன்னை தெரசாவை சந்தித்தார் டயானா. தன் 79 விலையுயர்ந்த உடைகளை ஏலத்தில் விட்டு அதன் மூலம்  கிடைத்த பெருந்தொகையை தர்ம காரியங்களுக்கு செலவிட்டார்.
diana (1)
அரபு நாட்டைச்சேர்ந்த கோடிஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடியுடன் டயனாவுக்கு ஏற்பட்ட பர்சனல் நெருக்கம் புதிய சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது. இருவரும் பாய்மரக்கப்பலில் உற்சாகம் பொங்க பயணம் சென்றது பத்திரிக்கைகளுக்குப் பெரும் தீனியைக்கொடுத்தது. இருவரும் செல்லுமிடமெல்லாம் கேமராவும் கையுமாய் பத்திரிகைக்காரர்கள் அவர்களைத்துரத்தினார்கள். டோடியும் டயானாவும் பிரான்ஸில் தனிமையில் இருக்க ஆசைப்பட, பத்திரிகைகாரர்களால் அது முடியாமல் போனது. ஆகஸ்ல் 31, 1997 ல் பாரீஸின் ரிட்ஸ் உணவகத்தில் மாலை உணவுக்குப்பின் காரில் டயானா, டோடி, ஒரு பாதுகாப்பாளர் மற்றும் ஓட்டுனர் போய்க்கொண்டிருந்தார்கள்.
விடாமல் அவர்கள் காரைத்துரத்தியது வேறு ஒரு வாகனம். அதில் பத்திரிக்கைப்புகைப்படக்காரர்கள். அவர்களிடமிருந்து தப்பியே ஆக வேண்டும் என்ற வேகத்தில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில், பறந்தது டயானாவின் கார். விளைவு? கோரவிபத்து! டோடியும், கார் ஓட்டுனரும் அந்த இடத்திலேயே மரணமடைய, உயிருடன் இருந்த டயானாவை மட்டும் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். அழகான தேவதை போன்றே பார்த்துப்பழகிய டயானாவை, முகமும் எலும்புகளும் சிதைந்த நிலையில் பார்த்த மருத்துவர்கள் கூட அடக்க முடியாமல் கதறி அழுதனர். எவ்வளவு முயன்றும் அந்த புன்னகை இளவரசியை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த செய்தி கேள்விப்பட்ட உலகமே வேதனையில் உருகி கண்ணீர் விட்டது.
பல்லாயிரக்கணக்கான மலர்கள் அந்த இனிமையான இளவரசியின் கல்லறைக்கு இன்னமும் வந்து குவிந்து கொண்டிருக்கிறது.
1916Diana-thum



Loading...
  • பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்தலாம்05.09.2015 - Comments Disabled
  • கொழும்பு மாவட்டம் தேர்தல் விளம்பரம் 03.08.2015 - Comments Disabled
  • வரவு செலவுத்திட்டம் தொடர்பில் தொழிற்சங்க நடவடிக்கை25.11.2015 - Comments Disabled
  • தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதுவும் நடக்கவில்லை - சீ.வி.விக்னேஸ்வரன்05.09.2015 - Comments Disabled
  • Custom Vehicle Valuation System In A Mess03.03.2016 - Comments Disabled