- மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்
1983ம் ஆண்டிலிருந்து வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமது சிவில்
கட்டமைப்புக்களை இழந்து நின்றமை எல்லோரும் அறிந்ததே. காலத்துக்கு காலம் தேர்தல்கள் நடத்தப்பட்டாலும் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கவோ மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாக செயல்படவோ முடிந்திருக்கவில்லை. கச்சேரிகள் இபிரதேச செயலகங்கள் எவையும் இயங்கமுடியாதவாறு அவ்வப்போது நிர்வாக தடைகள் கூட பயங்கரவாதிகளால் அமுலாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் முஸ்லிம் பிரதேசங்களில் இந்த இடையூறுகள் ஒரு எல்லைக்கப்பால் ஆளுமை செலுத்தமுடியவில்லை. தமிழ் பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் ஓரளவாவது செயல்பட்டுவந்தனர். மத்தியில் ஆட்சியிலிருந்த கட்சிகளுடன் ஒப்பிடுகையில் அமைச்சு அதிகாரங்களிலும் நிதி ஒதுக்கீடுகளிலும் முஸ்லிம் அரசியல் வாதிகள் பங்கெடுத்து வந்தமையால் முஸ்லிம் பிரதேசங்கள் ஓரளவு அபிவிருத்தி கண்டுவந்தன. அதற்காக முஸ்லிம் பிரதேசங்கள் கொலைகளையோ அழிவுகளையோ சந்திக்கவில்லை என்பது பொருளல்ல. ஒப்பீட்டளவில் அந்த அழிவுகளிலிருந்து மீள எதோ ஒருவித அரசியல் பலம் முஸ்லிம்களுக்கு இருந்தது. அதேவேளை போராட்ட சூழலும் தமிழ் தலைமைகள் கடைப்பிடித்த எதிர்ப்பு அரசியலும் தமிழ் மக்களை அபிவிருத்தியில் இருந்து மட்டுமல்ல நாட்டு நடப்புகளிளிருந்தும் மீள முடியாத அகலபாதாளத்துக்கே தள்ளிவிட்டிருந்தன. கல்வி, பொருளாதாரம் என்று சகல துறைகளிலும் தமிழ் மக்கள் சபிக்கப்பட்ட சகாப்தங்களை தாண்டிவர நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர்.
இந்த நீண்ட இருள் வெளியின் பின்னர் 2008 ல் நிகழ்ந்த கிழக்கு மாகாண சபையின் உருவாக்கமே தமிழ் தலைமைகள் அரசியல் அதிகாரத்திலும் அபிவிருத்தியிலும் பங்கெடுக்கும் வாய்ப்பை உருவாக்கியது. முதலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் தொடர்ந்து கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளும் தொடக்கி வைத்த இணக்க அரசியலை இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் கைக்கொள்ள தொடங்கியுள்ளனர். கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் இது சாத்தியப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையில் முதலாவது ஆட்சிக்காலம் குறிப்பாக தமிழ் மக்களுக்கு மிக பெரிய நின்மதியை உருவாக்குவதில் வெற்றிகண்டது. அப்போது இடம்பெற்ற சகல நிதி ஒதுக்கீடுகளும் வேலைவாய்ப்புகளும் இன விகிதசரத்துக்கு ஏற்ப பகிர்ந்து கொள்ளுவதற்கான பொறிமுறை ஒன்றை முன்னாள் முதலமைச்சர் உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் வெற்றி கண்டிருந்தார். இதனால்தான் கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களோ சிங்கள மக்களோ கூட தாம் ஒதுக்கப்படுவதாக குறை கூறும் வாய்ப்புகள் இருக்கவில்லை.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 2012ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து செய்த சதியினால் முன்னாள் முதலமைச்சர் தோல்வி காண நேர்ந்தது.கிழக்குமாகாண சபையின் இரண்டாவது ஆட்சிகாலம் ஒரு தமிழர் கூட இல்லாத அமைச்சரவையை உருவாக்கியது.தமிழ் தேசிய கூட்டமைப்பு 11 உறுப்பினர்களை வென்றாலும் ஆட்சியமைக்க முடியவில்லை.
என்றாலும் "மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்ட துரோகி சந்திரகாந்தனை தோற்கடித்துவிட்டோம்" என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மகிழ்ச்சி கொண்டாடினர்.
ஆனால் இன்று நடப்பதென்ன? மத்தியில் இடம்பெற்ற ஜனாதிபதி ஆட்சி மாற்றம் வந்தவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கிழக்கில் புதிய இணக்க அரசியலை தொடங்கினர். தாம் புதிய ஆட்சியமைப்போம் என்று கூப்பாடு போட்டனர். இறுதியில் அதற்காக ஜனாதிபதி மைத்திரியிடம் மண்டியிட்டும் பார்த்தனர். இறுதியில் வாலை சுருட்டிக்கொண்டு முஸ்லிம் காங்கிரசிடம் இரந்து கேட்டு இரு அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டனர்.
அந்த அமைச்சர்களுக்கு கிழக்கில் என்ன நடக்கின்றது என்பதே தெரிவதில்லை என்று பரவலாக பாமர மக்கள் கூட பேசிக்கொள்வதை அவதானிக்க முடிகின்றது.முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனுடைய நிதி ஒதுக்கீடுகளினூடாக கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்களையும் செய்து முடிக்கப்பட்ட அபிவிருத்தி பணிகளையும் திறந்து வைப்பதில் சின்னசின்ன சந்தோசங்களை அடைவதில் குறியாயிருக்கின்றனர்.
இந்நிலையில் தான் நல்லாட்சி என்னும் பெயரில் கிழக்கில் கள்ள ஆட்சியே நடப்பதாக முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் சி.சந்திரகாந்தன் விசனம் தெரிவித்துள்ளார். அதாவது கிழக்கு மாகாணசபையின் 2015ஆம் ஆண்ட வரவுசெலவு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டம் மிகமோசமான பாதிப்பினை எதிர்கொண்டுள்ளது. அதாவது கிழக்கு மாகாணசபையின் நிதியொதுக்கீட்டில் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லைஎன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவரது குற்ற சாட்டுக்கள் வெறும் எழுந்தமானமானவை அல்ல.மிக துல்லியமாக சகலவித தரவுகளுடனும் அவற்றை அம்பலப்படுத்தியுள்ளார்.
- கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக மட்டகளப்பு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் வேறு மாவட்டங்களுக்கு திசை திருப்பபட்டுள்ளது.
- களுவாஞ்சிகுடி சமூகசேவைகள் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட பணம் சம்மாந்துறை பிரதேசத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
- மட்டக்களப்பில் சிறுவர் நன்னடத்தை பிரிவிற்கான கட்டிடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட ஒரு கோடி ரூபா நிதியும் சம்மாந்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
- சுகாதார துறையினருக்கான பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இரண்டு கோடி ரூபா சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபாவும் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபாவாகவும் மாற்றப்பட்டுள்ளது.
- நாவற்காடு கரடியனாறு தாண்டியடிபோன்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் பிற்படுத்தப்பட்ட எல்லைபிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளின் உள்ளக மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட 80இலட்சம் ரூபாவும் அம்பாறை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
என்கின்ற குற்றச்சாட்டுக்களை அவர் பகிரங்கமாக முன்வைத்துள்ளார்.
இதன்படி கிழக்கில் இனவாத அணுகுமுறை கைக்கொள்ள படுகின்றதா? தமிழ் மக்கள் ஒதுக்கப்படுகின்றார்களா? என்கின்ற சந்தேகங்கள் வலுக்கின்றன.இந்நிலைமைகள் தொடர்வது மறைந்து வரும் இன முரண்பாடுகளை மீண்டும் தலையெடுக்க வழிவகுக்கும்.கிழக்கில் மீள கட்டிஎழுப்பப் பட்டுள்ள நல்லுறவுகள் சீர்குலைய யாரும் வழிசமைக்க கூடாது.அவற்றுக்காக நாம் கடந்த காலங்களில் கொடுக்க நேர்ந்த விலைகள் மிகமிக அதிகமாகும்.எனவே கிழக்கு மாகாணத்துக்கு முதலமைச்சராக இருப்பவர் இன மத பேதமற்று முன்மாதிரியாக செயல்படவேண்டியதும் இந்த நிதி ஒதுக்கீட்டு விடயங்களில் வெளிப்படைத்தன்மை பேணப்படுவதும் அவசியமாகும்.
அந்த வகையில் முன்னாள் முதல்வரின் குற்ற சாட்டுக்களுக்கு பொறுப்பு சொல்லவேண்டிய கடமை முதலமைச்சருக்கும் அமைச்சரவை வாரியத்துக்கும் உண்டு.அதற்கும் மேலாக தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று 11 உறுப்பினர்களை குத்துக்கல்லாட்டம் கிழக்கு மாகாண சபையில் இருத்தியுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு உண்டு.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரும்பி அமர்த்திய ஜனாதிபதியின் நல்லாட்சியிலே அதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கெடுக்கும் இந்த கிழக்கு மாகாண சபை ஆட்சியிலே தமிழ் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை கூட பாதுகாக்க முடியவில்லை என்றால் எப்படி இவர்கள் எமது மக்களுக்கு விடுதலை பெற்று தருவர்? ஏன் இவர்களால் அமைச்சரவை கூட்டங்களில் இது பற்றி பேசமுடியாதுள்ளது? முதலமைச்சரை தட்டிக்கேட்கும் தைரியம் இல்லாத நோஞ்சான் கட்டைகளுக்கு எதற்கு அரசியல் தலைவர்கள் என்கின்ற மகுடங்கள்? தமது பதவியும் சம்பளங்களும் போதும் என்கின்ற நிலைப்பாடா? மக்கள் எக்கேடு கேட்டு போனாலும் இவர்களுக்கு கவலையில்லையா? இவற்றை கூட செய்ய முடியாத இவர்கள் எதற்காக அமைச்சர்கள் ஆனார்கள்? எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் இவர்களுக்கு எதற்காக வாக்களித்தார்கள்? என்றெல்லாம் எமதுமக்கள் சிந்திக்காதவரை அவர்கள் காட்டில்தான் மழை.சுருங்க சொன்னால் கூரை ஏறி கோழிகூட பிடிக்கத்தெரியாதவர்கள் இந்த கூட்டமைப்பினர்.இவர்களை நம்பி வானம் ஏறி வைகுந்தம் போவார்கள் என்று காத்து கொண்டிருக்கும் நம் மக்கள்தான் பாவம்.
மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்