நோன்பு திறக்க துஆ: ‘‘அல்லாஹூம்ம லக்க ஸூம்த்து வபிக ஆமன்த்து வ அலைக்க தவக்கல்த்து வஅலா ரிஜ்கிக்க அப்தர்து பதகப்பல்மின்னி’’ (யா அல்லாஹ். உனக்காக நோன்பு நோற்றேன். உன்னையே ஈமான் கொண்டேன். உன் மீதே நம்பிக்கை வைத்தேன். உன்னுடைய உணவைக் கொண்டே நோன்பு திறக்கிறேன். என் நோன்பை ஏற்றுக்கொள்வாயாக).
நோன்பு வைக்க துஆ: ‘‘நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி பர்ளி ரமலான ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹித் தஆலா’’(இந்த வருட ரமலான் மாதத்தின் இன்றைய பர்ழான நோன்பை அல்லாஹ்விற்காக நோற்க நிய்யத் செய்கிறேன்).
நிய்யத் எனும் உறுதிமொழி!
‘‘இருள் நீங்கி விடியற்காலை (பஜ்ரு) ஆகிவிட்டது என்று உங்களுக்கு தெளிவாகும் வரையில் புசியுங்கள், பருகுங்கள் (கிழக்கு வெளுத்த) பின்பு இரவு (ஆரம்பமாகும்) வரை நோன்புகளை நோற்று முழுமையாக்குங்கள்’ என்கிறது திருக்குர்ஆன். நோன்பு வைப்பதற்கு முன்னும், நோன்பு திறக்கும்போதும் ‘நிய்யத்’ செய்வது அவசியம். ‘நிய்யத்’ என்றால் ‘மனதில் நினைத்தல்’ பொருள் தருகிறது. நபிகளார், ‘‘செயல்கள் யாவும் எண்ணங்களைக் கொண்டே அமைகின்றன’’ என்றார்கள். மனதி்ல் செய்யும் நிய்யத்தை வாய்வழியாக மொழிவதும் ஆகுமானது. தராவீஹ் இரவுத் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களில் இமாம்கள், ‘நிய்யத்’ சொல்ல, மற்றவர்கள் ஒருமித்த குரலில் திரும்பச் சொல்லும் வழமையுண்டு. ‘நாளை நாம் நோன்பு வைப்போம்’ என்று அன்றைய இரவு வேளையில் நபிகளார் கூறியதும், நோன்பிற்கான நிய்யத்தை முன்கூட்டியே நபிகளார் செய்ததும் அறியமுடிகிறது.
‘நிய்யத் இன்றி எந்த செயலும் நிறைவேறாது’. உறுதியான ‘நிய்யத்’கள் நமக்கான வெற்றிப்பாதை காட்டும்.