லண்டன், 2 ஜூலை- இங்கிலாந்து கடல் பகுதிகளில் மிகப் பெரிய விண்கல் விழ இருப்பதால் அந்நாட்டின் கடற்கரைப் பகுதிகள் சுனாமியால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின், சவுத் ஹாப்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பூமியின் மீது மோதக்கூடிய விண்கற்களின் ஓடுபாதைகளை ஆராய்ந்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் முடிவில், இங்கிலாந்து கடல் பகுதியில்சில ஆண்டுகளில் பெரிய விண்கள் விழும் அபாயம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பல்கலைககழக விஞ்ஞானிகள் “ஆர்மர்” எனும் சாப்ட்வேரை உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் விண்கற்களால் பாதிப்புகள் ஏற்படும் என்பதை அறிய முடியும்.
ஒவ்வொரு நாளும் பூமியின் மேற்பரப்பில் சிறிய அளவிலான விண்கற்கள் விழுந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அளவில் பெரிய விண்கற்கள் பூமியை மோதும் போது, மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன.
அந்த வகையில் இதுவரை 13,000 விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அதில் 500 கற்கள் பூமியின் மீது விழும் வாய்ப்பு உள்ளது.
ஆனாலும், தற்போது இங்கிலாந்து நாட்டைப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் விண்கல், நேரிடையாக இங்கிலாந்தில் விழாது என்றாலும், இங்கிலாந்தை ஒட்டியுள்ள கடல் பகுதியில் விழக்கூடிய வாய்ப்பு இருப்பதால், சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதற்கு முன்னர், 1908-ஆம் ஆண்டு, ரஷ்யாவின் துங்குஸ்கா பகுதியில் விழுந்த ராட்சத விண்கல் 1000 அணுகுண்டுகளின் சக்தியை வெளிப்படுத்தியது. அப்போது, 830 அடி சதுர மைல் பரப்பளவில் இருந்த 8 கோடி மரங்கள் சாம்பல் ஆகின. 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.