நடேசன்
மனைவியை அதிகம நேசிக்க யன்னலுக்கு வெளியே நின்று பார்க்க வேண்டும்
என்பார்கள். திருமண உறவில் மட்டுமல்ல மற்றைய விடயங்களிலும் வெளியே நின்று பார்க்கும்போது உண்மைகள் தெளிவாக புலப்படும்.
சமீபத்தில்ஆபிரிக்கா சென்று பின்பு சில விடயங்களைப் படித்ததில் ஆபிரிக்காவில் நிலங்களில் விவசாயம் செய்து வந்த சமூகங்களில் தந்தை வழிசமூகம் பற்றி அறியமுடிந்தது. தந்தை, பின்பு மகன் என குடும்பத்தலைமை தொடர்வதால் தலைமைத்துவம் உருவாகிவிடுகிறது. தந்தையின் பின் மகன், இல்லாதவிடத்து தம்பி அந்த சமூககூட்டத்திற்கு தலைமையேற்றுவிடுகிறான். ஆபிரிக்காவின் இந்த இடங்களில் ஐரோப்பியர்கள் அதிகாரம் செலுத்தும் போது, அவர்கள் இப்படியான தலைவர்கள் மூலமாக வரி அறவிடல் மற்றும் யுத்தத்துக்கு ஆள்சேர்த்தல் என்பதான விடயங்களை செய்தார்கள். ஐரோப்பியரின் காலனி ஆதிக்கத்தின் வண்டியில் இந்த சமூகத் தலைவர்கள் சக்கரமாக இருந்தார்கள்.
ஆபிரிக்காவின் சில இடங்களில் தலைமை இல்லாத சமூகங்கள் இருந்தன. கால்நடைகள் ஆபிரிக்கர் மத்தியில் முக்கிய செல்வமாக மதிக்கப்படுவதால் ஓரளவு அதிக கால்நடை வைத்திருப்பவர்கள், அல்லது நிலம் வைத்திருந்தவர்களிடம் ஐரோப்பியர் அதிகாரத்தை கொடுத்து சமூகத் தலைவர்கள் (Tribal chief) ஆக்கிவிட்டார்கள். ஐரோப்பியர்களால் மக்களிடம் நேரடியாக செல்லமுடியாது அத்துடன் மக்கள் பிரதிநிதிகள் என புதியவர்களை நியமித்து ஜனநாயகத்தை உருவாக்கவும் விருப்பமில்லை. ஆனால் சமூகத்தில் ஐரோப்பியர் உருவாக்கிய இப்படியான திடீர் தலைமைகள் பிரச்சினைக்கு உரியதாகிறது. இந்தப் புதியவர்களின் அதிகாரத்திற்கு பலவிதங்களில் அபாயம் வரும். வேறு ஒருவர் பல மாடுகளுக்கு சொந்தகாரராகிவிட்டாலோ அல்லது நோயால் மாடுகள் இறந்தால் அவரது தலைமைக்கு கேள்வி வந்துவிடும். பாரம்பரியத் தலைமையுள்ள இடங்களில் இந்தப் பிரச்சினை இல்லை.
எனது சொந்தக்கதை
இதேபோன்ற அமைப்பு, நமது ஊரிலும் உள்ளது. எனது தாய்வழிப்பாட்டனால் ஊரில் அவரது படிப்பு உத்தியோகம் மற்றும் குணத்தால் ஊரில் அவர் பெரியவராக மதிக்கப்பட்டார். அந்த வாத்தியாரிடம் ஆலோசனைக்கும் உதவிக்கும் வருவோர் பலரை சிறுவயதில் கண்டுள்ளேன்.
அவரது முதுமை வயதில் அவரது இரண்டு ஆண்பிள்ளைகள் மற்றைய ஊர்களில் திருமணமாகி வெளியேறினார்கள். அவரது இரண்டு பெண்பிள்ளைகளை அதாவது எனது பெரியம்மாவையும் அம்மாவையும் முறையே அனலைதீவிலும் நயினாதீவிலும் இருந்து வந்து திருணம் முடித்தவர்கள் எனது தந்தையும் பெரியப்பாவும். ஆனால் இவர்களால் எனது பாட்டனின் இடத்திற்கு சமூகத்தில் போகமுடியவில்லை. ஊரில் பிற்காலத்தில் சில சண்டைகள் வந்தன. பாட்டாவின் இடத்தை நிரப்ப பலர் விரும்பினார்கள். ஆனால், சண்டையில்தான் முடிந்தது என்பதை இப்பொழுது நினைத்துப் பார்க்கின்றேன்.
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு வெளியே நிலை வேறு மாதிரியாக இருக்கிறது. சிங்கள சமூகத்தில் மற்றும் இந்திய தொடர்புள்ள தமிழ் சமூகத்தில் கணவனின் வீட்டில் திருமணத்தின் பின்பு மனைவி சென்று வாழ்வது வழக்கம். இதனால் சமூகத்தில் ஆண்கள் மத்தியில் சமநிலை உருவாகிறது.
தமிழ்அரசியலில் இது பாதிப்பை உருவாக்குகிறதா?
பலருக்குத் தெரிந்தவரையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் தனி மனிதராக நேர்மையானவர். எந்த அப்பழுக்கும் அற்றவராக சரித்திரத்தில் இடம்பெற்றவர். ஆனாலும் தமிழ் காங்கிரசில் இருந்து பிரிந்து தமிழரசுக்கட்சி தொடங்கியதும் அவருடைய நடவடிக்கைகள், தமிழ்காங்கிரஸ் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலத்தினால் ஏற்பட்ட பயத்தில் உருவாகியவை. இதற்காக தமிழர் பிரச்சினைகள் இல்லையென்று சொல்லவில்லை.
தமிழரசுகட்சியின் பெரும்பாலான கோசங்களாக (Rhetoric) இருந்தன. இப்படியான கோசங்களை சட்டக்கல்லூரிகளில் கிரேக்க கல்வி முறையில் கற்பித்ததால் இந்த தமிழ் சட்டத்தரணிகளுக்கும் இலகுவாக வந்தது.
மக்கள் மத்தியில் உணர்வுகளை எழுப்பும் கோசங்களை அறிவதற்கு, சேக்ஸ்பியரின் மார்க் அன்ரனி பேசுவது உதாரணம். ரோமன் செனட்டில் ஜுலியஸ் சீசரின் கொலைக்கு உடந்தையாக இருந்த புரூட்டஸ்ஸூக்கும் மற்றவர்களுக்கும் எதிராக ரோமன் மக்களை கிளர்ந்து எழுச்சிகொள்வதற்கு மார்க் அன்டனி பேசும் வார்த்தைகளில் பாவிக்கும் கோசங்கள் ஆங்கில மொழியில் படிப்பவர்களுக்கு உதாரணமானவை.
பெரும்பான்மைத் தமிழருக்கு ஜி.ஜி. பொன்னம்பலத்தால் தலைமைத்துவம் வழங்கமுடியாது என்பது எவருக்கம் தெரியும். அவருக்கு அரசியல் பகுதி நேரமாகத்தான் இருந்தது.
அமிர்தலிங்கத்தின் தலைமையில் தனது இரண்டாவது இடத்தில் இருந்த மட்டக்களப்பு உறுப்பினரான இராசதுரையை ஓரம்கட்ட எந்தத் தகுதியும் அற்ற காசி ஆனந்தனை மட்டக்களப்பில் போட்டியிடவைத்து தோல்வியடையப்பண்ணியதுடன், இராசதுரையை அரசாங்கக் கட்சிக்கு மாறவைத்த பெருமையின் மூலம் தனது அரசியல் சாணக்கியமற்ற தன்மையை காட்டினார்.
இதேபோல் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய தலைமையை பலர் ஏற்கத்தயாராக இருந்தார்கள். ஆனால் எந்த ஒரு நிழலைக் கூட தனக்கு போட்டியாக நினைத்துப் பயந்து சிறு இயக்கங்களின் தலைவர்களில் இருந்து அமிர்தலிங்கம்வரை தமிழ்த் தலைவர்களைக் கொன்று ஜக் த ரிப்பர் (Jack the Ripper) போன்ற சீரியல் கொலைகரராக மாறினார்.
இப்படியான நிலைமை பத்மநாபாவைத்தவிர மற்ற இயக்கத்தலைமைகளிடமும் இருந்தது. அந்த மற்றவர்கள் எல்லோரும் தலைமையை தக்க வைப்பதற்காக பயத்திற்கு உட்பட்டார்கள்.
இதற்கு நிச்சயமாக இலங்கைத் தமிழ் சமூக அமைப்பில்தான் காரணம் இருக்கவேண்டும். ஆண்கள் திருமணம் செய்து மனைவியின் ஊருக்கு அல்லது மனைவியின் தரப்பு வீட்டுக்குச்செல்லுகிறார்கள். ஆண்கள் சொந்த வீட்டை விட்டு வெளியேறுவதால் அவர்களால் தந்தையின் தலைமைத்துவத்தைப் பெறமுடியாதது மட்டுமல்ல, புதிய இடத்தில் தங்களை தக்க வைப்பதும் இலகுவான காரியமல்ல.
இதிலும் தலைமைத்துவத்தை நோக்கி அவர்கள் ஆசைப்படும்போது, அங்கும் தலைமைத்துவத்திற்கு போட்டிகள் வரும். அதனால் ஏற்படும் பயம் இவர்களை குறுக்கு வழிகளில் தள்ளுகிறது. இவர்களது உண்மைக்குப்புறம்பான பலவிடயங்களை பட்டியல் இடலாம்
இலங்கையில் 25 வீதமான சிறுபான்மையினருக்கு பொன்னம்பலம் 50 வீதம் கேட்டார்.
இலங்கையின் கிழக்கு மாகாணம் எந்தக்காலத்திலும் யாழ்ப்பாண இராச்சியத்தோடு இருந்ததில்லை. ஏன் யாழ்ப்பாண இராச்சியம் முல்லைத்தீவுக்கு அப்பால் போக வில்லை. சரித்திரத்தில் கிட்டத்தட்ட 400 வருடங்கள் மட்டுமே இருந்த யாழ்ப்பாண குறுநில அரசு இந்தியாவில் இருந்த நாயக்கர்களால் ( தற்போதைய ஆந்திரர்) உருவாக்கப்பட்டது. இது தமிழரசு?
கிழக்குமாகாணத்தில் 1972 இல் 65 வீதத்துக்கு மேற்பட்டவர்களாக இஸ்லாமியரும் சிங்களவரும் இருந்தபோது ஜனநாயகத்தில் வடக்கு கிழக்கு இணைந்த தமிழ்ஈழம் எப்படி இது சாத்தியமாகும்?
இப்படியான கோரிக்கைளை இவர்கள் வைத்தபோது இவர்கள் இந்த கோரிக்கைளை உண்மையாக நம்பினார்கள் என்று சொல்லி இவர்களது அறிவை குறைத்து மதிப்பிடமுடியாது. செல்வநாயகம் அமிர்தலிங்கம் பிரபாகரன் போன்றவர்களால் நிச்சயமாக இந்த கொள்கைகளின் எதிர்விளைவைப்புரிந்து கொள்ளும் அறிவு இருந்திருக்கும். ராஜிவ் காந்தியை கொல்ல தீர்மானித்தபோது அதன் எதிர்விளைவைப் புரியாதவர்தான் பிரபாகரன் என்று நம்பமுடியமா?
மகாபாரத தருமன் போன்ற சூதாடிகள் என்று மட்டுமே எண்ணமுடிகிறது. சம்பந்தர், விக்கினேஸ்வரன் என எமது சமூகத்தில் அந்த இடத்தை நிரப்பிவருகிறார்கள்.
நமக்கு மட்டும் ஏன் இத்தகைய தலைமைகள்?
இப்படியான தலைமையுள்ள சமூகம் தற்கால ஜனநாயக்தில் மக்களை மயக்கும் கோசங்களை வைத்தோ மற்றவர்களை கொன்றோ தலைமையை தக்கவைக்க முயலுவதன் காரணம் — இந்த ஆண் பெண் உறவில் இருந்து வந்த தொடர்பா என சிந்திக்க வைக்கிறது. இந்தவிடயம் சமூக ஆராய்ச்சியாளர்களுக்குரியது. ஆனாலும் நமது சமூகவித்தியாசங்கள் நமது நடத்தைகளை உருவாக்குகிறது.
நிச்சயமாக மிருகங்களில் இந்தத் தன்மை உள்ளது. மனிதர்கள் சமூக மிருகங்கள்தானே?
சமீபத்தில் தனது முயற்சியால்த்தான் எஸ் ரி எவ் யாழ்பாணம வரவில்லை என சம்பந்தர் சொன்னதால் மனம் கேட்காமல் எழுதியது
மகாபாரத தருமன் போன்ற சூதாடிகள் என்று மட்டுமே எண்ணமுடிகிறது. சம்பந்தர், விக்கினேஸ்வரன் என எமது சமூகத்தில் அந்த இடத்தை நிரப்பிவருகிறார்கள்.
நமக்கு மட்டும் ஏன் இத்தகைய தலைமைகள்?
இப்படியான தலைமையுள்ள சமூகம் தற்கால ஜனநாயக்தில் மக்களை மயக்கும் கோசங்களை வைத்தோ மற்றவர்களை கொன்றோ தலைமையை தக்கவைக்க முயலுவதன் காரணம் — இந்த ஆண் பெண் உறவில் இருந்து வந்த தொடர்பா என சிந்திக்க வைக்கிறது. இந்தவிடயம் சமூக ஆராய்ச்சியாளர்களுக்குரியது. ஆனாலும் நமது சமூகவித்தியாசங்கள் நமது நடத்தைகளை உருவாக்குகிறது.
நிச்சயமாக மிருகங்களில் இந்தத் தன்மை உள்ளது. மனிதர்கள் சமூக மிருகங்கள்தானே?
சமீபத்தில் தனது முயற்சியால்த்தான் எஸ் ரி எவ் யாழ்பாணம வரவில்லை என சம்பந்தர் சொன்னதால் மனம் கேட்காமல் எழுதியது