ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் இருக்கும் தனூப் நதியில் ஒரு லட்சம் யூரோக்களுக்கும் அதிகமான கரன்ஸி நோட்டுகள் மிதந்து வந்தது குறித்து அந்நாட்டுக் காவல்துறை விசாரித்து வருகிறது.
இந்த கரன்ஸி நோட்டுக்கள் மிதந்துவந்ததைக் கண்ட ஒருவர் அதை எடுப்பதற்காக நதிக்குள் குதித்தார்.
இதுகுறித்து வியன்னா நகர காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் யூரோ நோட்டுக்கள் காயவைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இருக்கின்றன.
ஆனால் இந்த கரன்ஸி நோட்டுக்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து இன்னமும் மர்மம் நிலவுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த பணம் தங்களுடையது என்று உரிமைகோரி பலர் காவல்துறையிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டனர்.
ஆனால் காவல் துறையோ இந்த பணம் குற்றத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று நம்புகிறது. இல்லாவிட்டால் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அது கருதுகிறது.
கடந்த சனிக்கிழமையன்று தனூப் நதியோரம் நடந்து சென்ற இரண்டு இளைஞர்கள் நதியில் மிதந்துகொண்டிருந்த இந்த கரன்ஸி நோட்டுக்களை முதன்முதலில் கண்டனர்.
அவர்களில் ஒரு இளைஞர் இந்த பணத்தை எடுக்க நதிக்குள் குதித்தார்.
உறைய வைக்கும் குளிர்நீரில் மிதந்துகொண்டிருந்த 100 மற்றும் 500 யூரோ நோட்டுக்களை அவர் நீருக்குள் நீந்தி நீந்தி கைப்பற்றினார். இந்த பணத்தில் தனக்கு ஒரு பங்கு தரப்பட வேண்டும் என்று அவர் தற்போது கோரிக்கை விடுத்திருக்கிறார்.