தொடர்ந்தும் பழிவாங்கப்படுவதாக கோத்தபாய புலம்பல்
ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்படாமல் தாம் தொடர்ந்தும் பழிவாங்கப்பட்டு வருவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அடிக்கடி அழைக்கப்படுகின்ற போதும் மோசடி தொடர்பில் இன்னும் விசாரணை செய்யப்படவில்லை.எனவே, இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும். நேற்றும் பல மணிநேரம் விசாரணை செய்யப்பட்ட என்னிடம் ரக்னா லங்கா நிதி மோசடி தொடர்பில் எதுவும் கேட்கப்படவில்லை.
நான் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படுமாகவிருந்தால் எனது சொத்துக்களை சோதனை செய்யமுடியும்.
வங்கிக் கணக்குகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் ஆராயமுடியும். இதனை விடுத்து நான் மோசடியில் ஈடுபட்டமையை எவ்வாறு நிரூபிப்பர்.
நான் சட்டத்துக்கு உட்பட்ட விதத்திலேயே வருவாயை தேடிக் கொண்டேன் எனத் தெரிவித்ததோடு, ரக்னா லங்கா நிறுவனம் மூலம் அரசாங்கத்துக்கே அதிக நன்மை கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.