Saturday, 3 October 2015

'தமிழ் மக்கள் ஏன் வன்முறையை பின்பற்றினார்கள் என்பது கேள்விக்குறியே'

Image captionஇந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக சர்வதேச அகிம்சை தினம் நடைபெற்றுள்ளது
இலங்கையில் 'அகிம்சை வழியை பின்பற்றிவந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் போன்ற சத்தியத்தைப் பேணிய தலைவர் வழிகாட்டியிருந்தும்கூட, தமிழ் மக்கள் வன்முறையை ஏன் பின்பற்றினார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றதன் பின்னர் முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வன்முறையை இனியொரு போதும் ஆதரிக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச அகிம்சை தின நிகழ்வில் சம்பந்தன் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக சர்வதேச அகிம்சை தினம் நடைபெற்றுள்ளது.
மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை உலக நாடுகள் சர்வதேச அகிம்சை தினமாகக் கொண்டாடி வருகின்றன.
வன்முறை முடிவுக்கு வந்து, அகிம்சையின் அடிப்படையில் தமிழ் மக்கள் செயற்படத் தொடங்கியிருப்பதன் காரணமாகவே சர்வதேசத்தின் ஆதரவு அதிகளவில் இப்போது கிட்டியிருக்கின்றது என்று சம்பந்தன் இங்கு தெரிவித்துள்ளார்.
உலகில் செல்வாக்கு மிக்க, அண்டை நாடான இந்தியாவின் உதவி ஒத்தாசைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தமிழ் மக்கள் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் உரையாற்றியபோது வலியுறுத்தியிருக்கின்றார்.
வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ள பிரதேசத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களைச் சந்தித்த சம்பந்தன், வியாழனன்று அங்கு இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வு ஒன்றிலும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...